
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 2040ம் ஆண்டு வரை ஐசிசி தடை விதித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஊடகங்கள் வெளியிடும் நியூஸ் கார்டு போல ஐசிசி பத்திரிகை செய்தி, ஐசிசி தலைவர் ஜெய்ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படத்துடன் பதிவு ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாகிஸ்தான் அணிக்கு ICC – 2040 வரை தடை விதித்துள்ளது! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு, ஐசிசி ஒரு ஆண்டு தடை விதித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி கூட்டத்தில் 14-2 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் PSL தொடருக்கு தடை, வருவாய் பங்கு குறைப்பு மற்றும் 2040 வரை ஐசிசி போட்டிகளை நடத்த அனுமதி இல்லை என தகவல் தெரிவிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2040ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்கு தடை என்று குறிப்பிட்டுவிட்டு, உள்ளே 2040ம் ஆண்டு வரை ஐசிசி போட்டிகளை நடத்தத் தடை என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். ஆனால், இப்படி ஒரு அறிவிப்பு எதையும் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. மேலும், நியூஸ் கார்டில் உள்ள பத்திரிகை செய்தி பார்க்க உண்மையானது போல இல்லை. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

ஐசிசி இணையதளத்தில் பத்திரிகை செய்தி பகுதிக்கு சென்று சமீபத்தில் வெளியான பத்திரிகை செய்திகளை பார்த்தோம். டி20 உலகக் கோப்பை 2026 தொடர்பாக பிப்ரவரி 1ம் தேதி அறிக்கை வெளியாகி இருந்தது. அதைத் தவிர உலகக் கோப்பையின் ஏ, பி அணிகள் பற்றியும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி தொடர்பான செய்திக் குறிப்புகள் இருந்தன. பிப்ரவரி 1ம் தேதி வெளியாகி இருந்த அறிக்கையில் பாகிஸ்தான் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுமுகமான முடிவை எடுக்கும் என்று நம்புவதாக ஐசிசி கூறியிருந்தது. அந்த அணிக்கு தடை விதிப்பதாக அதில் குறிப்பிடப்படவில்லை.

உண்மைப் பதிவைக் காண: icc-cricket.com I Archive
பாகிஸ்தான் அணி விலக்கப்பட்டதாக ஐசிசி அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் தகவல் ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அதிலும் அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை. எனவே, இந்த தகவல் தவறானதாக இருக்கும் என்பது தெளிவானது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் இடம் பெற்றிருந்த பத்திரிகை செய்தியில் இடம் பெற்றிருந்த முதல் இரண்டு வரியை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம்.
சில சமூக ஊடகங்களில் அந்த பத்திரிகை செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்களோ, ஐசிசி-யோ இதை வெளியிடவில்லை. எனவே, ஐசிசி-யின் பழைய பத்திரிகை செய்தி புகைப்படங்களுடன் இந்த பத்திரிகை செய்தியை ஒப்பிட்ட ஆய்வைத் தொடர்ந்தோம். Circle Of Cricket என்ற ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட பல சமூக ஊடக பக்கங்களில் இந்த அறிக்கை வெளியாகி இருந்தது. தூர்தர்ஷனும் ஐசிசி-யின் பத்திரிகை செய்தியை வெளியிட்டிருந்தது. தூர்தர்ஷன் வெளியிட்டிருந்ததால் அதை ஆதாரமாக எடுத்துக்கொண்டோம்.

ஐசிசி இணையதளத்தில் வெளியாகி இருந்த அதே தகவல் தூர்தர்ஷன் வெளியிட்டிருந்த பதிவிலும் அப்படியே இருந்தது. ஆனால், அதில் ஐசிசி தலைவர் ஜெய்ஷா கையெழுத்து இல்லை. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் ஜெய்ஷா கையெழுத்து இருந்தது. ஆங்கில ஃபாண்டும் வித்தியாசமாக இருந்தது. இதன் மூலம் விஷமத்தனமான தகவலை ஐசிசி பத்திரிகை செய்தி வடிவில் போலியாக உருவாக்கியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ள தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு 2040ம் ஆண்டு வரை தடை விதித்த ஐசிசி என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 2040 ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டுள்ளதா?
Fact Check By: Chendur PandianResult: False


