பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அதை மக்கள் அடித்து உடைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

பஸ் ஒன்றை இஸ்லாமியர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "விழாக்கோலம்_பூண்டது எ#பெங்களூர் 😄😄😄😄.... இலவசம் எங்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்பதற்கான ஒரு உதாரணம் கர்நாடகாவில்.. #இலவச_பேருந்து நிறுத்தவில்லை என்ற காரணத்தால்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Pooranasamy Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 25ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெங்களூருவில் இலவச பேருந்து நிற்காததால் மக்கள் அதை அடித்து உடைத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும்தான் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் பெண்களையே காண முடியவில்லை. மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஹரியானாவில் கலவரம் நடந்த போது இஸ்லாமியர்கள் அரசு பஸ்ஸை அடித்து உடைத்தனர் என்று இந்த வீடியோ வட இந்தியாவில் வைரலாக பகிரப்பட்டிருந்தது நினைவில் இருந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவில் உள்ள பேருந்தின் எண் GJ என்று ஆரம்பிப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. இதன் மூலம் இந்த பஸ் பெங்களூருவை சார்ந்தது இல்லை, குஜராத்தைச் சார்ந்தது என்பது தெளிவாகிறது. ஜிஜே 05 என்ற பதிவு எந்த நகரத்தைச் சார்ந்தது என்று தேடிப் பார்த்த போது, அது குஜராத் மாநிலம் சூரத்தைச் சார்ந்தது என்பது தெரியவந்தது.

அடுத்ததாக இந்த வீடியோ இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு இந்த வீடியோ கிடைக்கவில்லை. ஆனால், தாக்குதலுக்கு ஆளான பேருந்துகளுடன் ஒத்துப்போகும் வேறு சில வீடியோக்கள் கிடைத்தன. பஸ்ஸின் டிரைவர் பக்க கண்ணாடி மீது எழுதப்பட்டிருப்பது இரண்டு வீடியோவிலும் ஒத்துப்போனது. 2019ம் ஆண்டு பேரணியில் வன்முறை வெடித்ததாகவும் இரண்டு பஸ்கள் தாக்கப்பட்டது என்றும் செய்திகள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் இலவச பஸ் நிற்காமல் சென்றதால் அதை உடைத்த மக்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதும் உறுதியானது.

சூரத் பஸ் எப்படி இருக்கும் என்று அறிய அதன் புகைப்படத்தைத் தேடினோம். அப்போது Sitilink Surat city bus என்று அதன் அந்த பஸ்ஸின் APP பற்றிய தகவல் கிடைத்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பஸ்ஸின் பக்கவாட்டில் Sitilink என்று எழுதப்பட்டிருந்ததைத் தெளிவாகக் காண முடிந்தது.

சூரத்தில் நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது என்ற விவரத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். அப்போது பல ஊடகங்கள் வெளியிட்ட வீடியோக்கள் கிடைத்தன. அதில் ஒரு வீடியோவில் பஸ் ஒன்றின் பதிவு என் தெளிவாக தெரிந்தது. GJ 05 BZ 8915 என்று இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அந்த பதிவு எண் கொண்ட பஸ்ஸைதான் மக்கள் தாக்குகின்றனர். இதன் மூலம் இந்த பஸ் குஜராத்தைச் சார்ந்தது என்பது தெளிவாகிறது.

செய்திகளில் இந்த சம்பவம் சூரத்தின் Nanpura என்ற பகுதியில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூகுள் மேப்பில் அந்த பகுதியை தேடி எடுத்தோம். மசூதி, சாலை நடுவே உள்ள சிறிய கோபுரம், கட்டிடம், ஹோர்டிங்ஸ் என எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பகுதியுடன் ஒத்துப்போகிறது.

நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த பஸ் தாக்குதல் சம்பவம் 2019ம் ஆண்டு சூரத்தில் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கர்நாடகத்தில் இலவச பஸ் நிற்காததால் அதை தாக்கிய மக்கள் என்று பரவும் வீடியோ 2019ல் சூரத்தில் நடந்த ஒரு கலவரத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அடித்து உடைத்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False