
‘’தீபாவளி அன்று மாமிசம் சாப்பிடுவோர் ஹிந்துக்கள் அல்ல என்று எச்.ராஜா விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் மூலமாக, அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடினோம். அப்போது, பலரும் இதனை பகிர்ந்து வரும் விவரம் கிடைத்தது.

உண்மை அறிவோம்:
2020 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட்டதோடு, மக்கள் வீடுகளில் இருந்தபடியே கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி, சமூக வலைதளங்களில் வித விதமான கேலி, கிண்டல் பதிவுகளை பலரும் பகிர்ந்தனர்.
அதேசமயம், சிலர் சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய தகவலும் பகிர்கின்றனர். அப்படியான ஒரு சர்ச்சை தகவல்தான் மேலே நாம் கண்டதும்.
ஆனால், இது உண்மையா என்றால், இல்லை என்பதே பதில். காரணம், இப்படி எச்.ராஜா பேசியதாக எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை.
ஒருவேளை அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் இப்படி எதுவும் சர்ச்சைக்குரிய வகையில் தகவல் பகிர்ந்தாரா என தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் அவர் குறிப்பிடவில்லை. மாறாக, தீபாவளி வாழ்த்து மட்டுமே கூறி பதிவிட்டிருந்தார்.
சமீப நாட்களில் அவர் இப்படி பேசவில்லை என்பது உறுதியான அதேசமயம், அவர் கடந்த காலத்தில் இப்படி எங்கேனும் பேசியிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரிடமே நேரடியாக விளக்கம் கேட்டு பெற முயற்சித்தோம்.
இதன்படி, எச்.ராஜாவின் மருமகன் சூரியா ராமதாஸிடம் இதுபற்றி நமது நண்பர் வழியாக விளக்கம் கேட்டோம். இந்த தகவலை பார்வையிட்ட அவர், இதனை எச்.ராஜா கவனத்திற்கும் எடுத்துச் சென்றார். பிறகு, நமக்கு விளக்கம் அளித்தார். ‘’இப்படி எங்கேயும் எச்.ராஜா, அசைவம் சாப்பிடுபவர்களை விமர்சிக்கவில்லை. இது அவர் மீது வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உருவாக்கிய போலிச் செய்தி,’’ என்று அவர் தெரிவித்தார்.
எனவே, எச்.ராஜா கூறாத ஒன்றை கூறியதாக, சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் தகவல் பகிர்ந்து வருவது, சந்தேகமின்றி தெளிவாகிறது. இதனை அவரது தரப்பினர் மறுத்துள்ளனர்.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தீபாவளி தினத்தில் இறைச்சி சாப்பிடுவோர் இந்து அல்ல என்று எச்.ராஜா சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
