FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாத கோஷம் என்று பரவும் வதந்தி

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் தனி நாடு கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

காலிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் இந்தியாவை மிகக் கடுமையாக விமர்சித்தும் சீக்கியர்கள் கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் போராட்டமாகியது சாயம் வெளுத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Buvaneswaran Buvanesh என்பவர் 2020 டிசம்பர் 6ம் தேதி பதிவிட்டுள்ளார்.

Buvaneswaran Buvanesh மட்டுமின்றி, பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து, அதற்கு புது அர்த்தம் கற்பித்துப் பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

டெல்லி விவசாயிகள் பேரணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வீடியோவைப் பார்க்கும் போது அதில் வெளிநாட்டு போலீசார் சீருடையில் சிலர் நடந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இது உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த பதிவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வீடியோவில் சீக்கியர்கள் அணிந்திருந்த டீ ஷர்ட்டில் தனி நாடு கோரி போராட்டம் சான் ஃபிரான்சிஸ்கோ என்று எழுதப்பட்டிருப்பதைப் படிக்க முடிந்தது. எனவே, சீக்கியர்கள், சான் பிரான்சிஸ்கோ, தனி நாடு கோரி பேரணி என்று பல்வேறு கீ வார்த்தைகளை வைத்துத் தேடினோம். அப்போதும் எதுவும் கிடைக்கவில்லை.

வீடியோவில் பாரத மாதாவை விமர்சித்து கோஷம் எழுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் கூகுளில் கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது 2018ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி இந்த வீடியோவை ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தது நமக்கு கிடைத்தது. அதில், “பாரத மாதாவை திருடி என்றும் இந்துக்களை விமர்சித்தும் சீக்கியர் எழுப்பும் கோஷம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தொடர்ந்து தேடியபோது மிகத் தெளிவான வீடியோக்கள் கிடைத்தன. அதிலும் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. அந்த வீடியோ 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. 

Archive

நமக்கு கிடைத்த முதல் பதிவு 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டு இருந்தது. எனவே, அந்த ஆண்டில் சீக்கியர்கள் பேரணி எதுவும் சான் பிரான்சிஸ்கோவில் நடந்ததா என்று தேடினோம். அப்போது ஒவ்வொரு ஆண்டும் அங்கு சீக்கியர்கள் பேரணி நடத்துவதும், அவர்களுக்கு என்று தனி நாடு கோரி கோஷம் எழுப்புவதும் தெரியவந்தது. 

வீடியோவில் சீக்கியர்கள் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் சான் பிரான்சிஸ்கோ என்று குறிப்பிட்டிருப்பதன் மூலமும், போலீசார் அணிந்திருக்கும் சீருடை மூலமாகவும் இது அமெரிக்காவில் நடந்தது என்ற முடிவுக்கு வர முடிகிறது.

அதே நேரத்தில் எந்த ஆண்டு நடந்தது என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில் 2018ம் ஆண்டு முதல் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதன் மூலம் இதற்கும் 2020ல் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது. 

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தனி நாடு கோரி சீக்கியர்கள் கோஷம் எழுப்பினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமெரிக்காவில் சீக்கியர்கள் நடத்திய பேரணி வீடியோவை தற்போது டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாத கோஷம் என்று பரவும் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False