தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் என்று ரஞ்சித் கூறியதாக பரவும் பதிவு உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Ranjit 2.png
Facebook LinkArchived Link

இயக்குநர் ரஞ்சித் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து போட்டோ கார்டை உருவாக்கி உள்ளனர். அதில், “தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் – பா.ரஞ்சித் உளறல். 

தலித்தை மட்டுமே கதாநயாகன், கதாநாயகியாக வைத்து படம் எடுப்பேன்னு சொல்லு, தலித் தயாரிப்பாளர் படத்தை மட்டுமே இயக்குவேன்னு சொல்லு, தலித் மட்டுமே என் படத்தைப் பார்த்தால் போதும்னு சொல்லு, தலித் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தலித் கல்வி கற்க வேண்டும்னு சொல்லு… முதல்ல சினிமாவில் செய்யிடா பின்பு அரசியலில் கிழிக்கலாம்” என்று போட்டோ ஷாப் முறையில் டைப் செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Vishnu Tirupur என்பவர் டிசம்பர் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதுபோன்ற பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியதாக மற்ற சாதி, மதத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தவறான தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது.

இந்த பதிவில் கூறியிருப்பது போன்று ரஞ்சித் எப்போதாவது பேசினாரா என்று அறிந்துகொள்ள அவருடைய பி.ஆர்.ஓ குணா என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “ஓராண்டுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஞ்சித், சில கருத்தைக் கூறியிருந்தார். அதைத்தான் இவர்கள் மாற்றி இன்னும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். தலித் வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில் அவர் பேசவில்லை. அவருடைய பேச்சை முழுமையாக வெளியிடாமல், தவறான அர்த்தம் வரும் வகையில் திருத்தி வெளியிட்டள்ளனர். இது தவறான தகவல்” என்றார்.

Ranjit 3A.png
Search Link

அதைத் தொடர்ந்து, ரஞ்சித் பேசியது தொடர்பாக செய்தி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, விகடனில் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது. அதில், “தனித் தொகுதிகளில், பட்டியலின மக்களின் ஆதரவைப் பெற்று பதவிக்கு வந்தவர்கள், குறைந்தபட்சம் அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காதவர்களுக்கு நாம் ஏன் ஓட்டுப்போட வேண்டும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில், பட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும். 7 தனித்தொகுதிகளுக்காக மட்டுமாவது கூட்டணி அமைக்க வேண்டும். வேறு யாரிடமும் செல்லாமல், தோற்றாலும்  வென்றாலும் பரவாயில்லை எனப் பட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும்” என்று பேசினார் என்று குறிப்பிட்டிருந்தனர். ஒன் இந்தியாவில் இதற்கு திருமாவளவன் கருத்து தெரிவித்த செய்தியும் கிடைத்தது.

Ranjit 3.png
vikatan.comArchived Link 1
oneindia.comArchived Link 2

அவர் பேசிய வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். நியூஸ்18ல் அவர் பேசிய வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில் கூட “ஏழு தனித் தொகுதிகளிலாவது பட்டியலின அமைப்புக்கள் கூட்டணி ஏற்படுத்தி போட்டியிட வேண்டும். அந்த அமைப்பின் வேட்பாளர்களுக்கே வாக்களிப்போம்” என்று கூறுகிறார்.

tamil.news18.comArchived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போல, பொதுவாக எல்லா தொகுதிகளிலும் தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் பேசவில்லை. தமிழகத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏழு தனித் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் நிறுத்தும் பட்டியலின வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல், பட்டியலின மக்களுக்காக போராடும் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறியதை திருத்தி தவறான அர்த்தம் வரும் வகையில் வெளியிட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் தவறான வழிநடத்தலுடன் கூடிய தகவலுடன் பதிவிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் என்று ரஞ்சித் கூறியதாக பரவும் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False