
‘‘பிச்சைக்காரர் வேடத்தில் கேரளாவிற்கு படையெடுத்துள்ள குற்றவாளிகள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கேரள காவல்துறை அறிவிப்பு. கூடுதல் கவனமாக இருங்கள்.
இந்த ரமலான் மாதத்தில், வட மாநிலங்களிலிருந்து கேரளாவிற்கு ஏராளமான பிச்சைக்காரர்கள் படையெடுக்கிறார்கள். அவர்கள் கடுமையான குற்றவாளிகள். அவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்காதீர்கள். பெண்கள் மட்டுமே இருக்கும் வீட்டிற்கு அவர்கள் வந்தால், கதவைத் திறந்து அவர்களை வெளியேறச் சொல்லாதீர்கள்.
காவல்துறை புள்ளிவிவரங்களின்படி, கடந்த வாரத்தில் கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் வந்துள்ளனர்.
அவர்களின் அதிகரித்த ஓட்டத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்தபோது, ரமலான் மாதத்தில் பிச்சை எடுக்கவும், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் ஏழைகள் மற்றும் ஏழைகளிடம் கொள்ளையடிக்கவும் அவர்கள் அங்கு வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
பிச்சைக்காரர்களை ஒதுக்கி வைக்கவும்! உங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாப்பானதாக்குங்கள்.”
என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2018ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வதந்தி என்று தெரியவந்தது.
கடந்த 2018ம் ஆண்டு இதே வதந்தி மலையாளம் மொழியில் பரவியபோது, கேரள காவல்துறை மறுப்பு வெளியிட்டுள்ளதைக் கண்டோம்.
இதேபோன்று, 2019ம் ஆண்டும் கேரள காவல்துறை சார்பாக மீண்டும் மறுப்பு கூறப்பட்டுள்ளதாக, தெரியவந்தது.

அடுத்தப்படியாக, 2024ம் ஆண்டு இதே வதந்தி மீண்டும் பரவிய சூழலில் கேரள காவல்துறை விளக்கம் அளித்தது. அதனையும் ஆதாரத்திற்காக இங்கே இணைத்துள்ளோம்.

இவ்வாறு 2018ம் ஆண்டு முதலே இந்த வதந்தி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாக உள்ளது. இதுபற்றி கேரள காவல்துறை தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், இன்றளவும் மேற்கண்ட வதந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து பரவுகிறது. இதன் உண்மைத்தன்மை தெரியாமல் நமது வாசகர்கள் யாருக்கும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இறுதியாக, கேரள காவல்துறை தரப்பில் Cyber Crime Helpline தொடர்புகொண்டு, விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய அதிகாரி ‘’இது பல ஆண்டுகளாக பரவும் வதந்தி. ஏற்கனவே நாங்கள் பலமுறை மறுப்பு வெளியிட்டிருக்கிறாம்,’’ என்று கூறினார்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:பிச்சைக்காரர் வேடத்தில் கேரளாவிற்கு படையெடுத்துள்ள குற்றவாளிகள் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False


