ராகுல்காந்தி பற்றி டைம் மேகசின் கேலிச்சித்திரம் வெளியிட்டதா?

அரசியல் | Politics

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்றும் பயங்கரவாதிகளை வளர்த்துவிடுவதே காங்கிரஸ் கட்சிதான் என்றும் பிரபல டைம் பத்திரிகை அட்டைப்படம் மற்றும் செய்தி வெளியிட்டுள்ளதாக ஒரு கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு.

வதந்தியின் விவரம்:
அசிங்கம் செய்தது–. உலக பத்திரிக்கை ஊடகம்.”. நியுயார்க் டைம்ஸ்..” பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கும்..கைகூலியாம்..காங்கிரஸ் ..!! உலகம் கீழீத்து தொங்கவிட்டது..ராகுல் காந்தியை…??..உலகம் எச்சரிக்கை செய்கிறது.!!. கேவலப்பட்டது… காங்கிரஸ்.. ராகுல் குடும்பம்..??.. இந்தியாவில்.. தீவிரவாதத்தை..பால் ஊற்றீ.வளர்க்கும்.. காங்கிரஸ்..??..உண்மையை உரக்க சொன்ன..டைம்ஸ்..

Archive link

இந்த கார்ட்டூன் மூலமாக, காங்கிரஸின் உண்மை முகத்தை பத்திரிகை உலகின் ஜாம்பவான் ‘டைம்’ வெளிப்படுத்திவிட்டதாகவும், காங்கிரஸ் கட்சி இதனால் அசிங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை உண்மை என்று நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்துள்ளனர். இன்னும் அதிக அளவில் ஷேர் ஆகிக்கொண்டே இருக்கிறது.

உண்மை அறிவோம்:

கார்ட்டூனை பார்க்கும்போதே, அதில் ராகுல் காந்தியின் முகம் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் அதன் உண்மை படத்தைக் கண்டறிய கூகுள் இமேஜ் ரிவர்ஸ் தேடுதல் செய்தோம். அதில், உண்மைப் படம் நமக்குக் கிடைத்தது. அத்துடன் அதுதொடர்பான செய்தி ஆதாரமும் கிடைத்தது.

இதன்படி, கடந்த 2012ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழில், இந்த கேலிச்சித்திரம் முதலில் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தை எடுத்து, ராகுல் காந்தி போல முகத்தை மாற்றி பயன்படுத்தியுள்ளது தெளிவாகிறது. இது பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

படம் போலி என்பது உறுதியாகிவிட்டது… செய்தியில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று கூகுள் சர்ச் செய்தோம். மேலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர பாதுகாப்புத் துறை எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறிய செய்திதான் கிடைத்தது.

பிறகு எப்படி இந்த செய்தி வெளியானது என்று தொடர்ந்து தேடினோம். அப்போது சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் பேட்டி நம் கண்ணில்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு விவகாரங்களுக்கான தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், “பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் தொடர்ந்து தாக்கிக்கொண்டே உள்ளனர். மும்பையிலும் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்த செயலுக்கு பாகிஸ்தான் குடிமக்கள் ஒவ்வொருவரையும் குறை சொல்ல முடியாது” என்று கூறியிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

சாம் பிட்ரோடோ பேட்டி குறித்து மார்ச் 21ம் தேதி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு மிகவும் நம்பகமான ஆலோசகர் மற்றும் வழிகாட்டி இந்திய ராணுவத்தின் செயல்பாட்டைக் குறைத்து மதிப்பிட்டு காட்டியதன் மூலம் காங்கிரஸ் கட்சி சார்பில் பாகிஸ்தான் தேசிய தின கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்துள்ளார்” என்று கூறியிருந்தார். அந்த பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archive Link

சாம் பிட்ரோடோவின் கருத்தை அப்படியே மாற்றிப் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது இந்த பதிவு. இதைத் தொடர்ந்து சாம் பிரிட்டோவின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. கடைசியில், இது என்னுடைய சொந்த கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து இல்லை என்று பின்வாங்கினார் பிட்ரோடோ.

ஆனாலும், பா.ஜ.க-வினர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில்,  பா.ஜ.க தலைவர் அமித் ஷா ட்விட்டரில் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில், “எதிர்க்கட்சிகளுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தெளிவாக புரிந்துகொள்ளலாம். அவர்கள் நம்முடைய ராணுவத்தை சந்தேகிக்கின்றனர். நாமே அவர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் இதயம் பயங்கரவாதிகளை நினைத்து துடிக்கிறது. நம்முடைய இதயமே மூவர்ணக் கொடியை எண்ணித் துடிக்கிறது. இந்த தேர்தலில் வாக்கு என்ற உங்கள் ஆயுதம் மூலம் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்துங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். ட்விட்டர் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது:


Archive link

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தொடர்ந்து நிறைய பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த சம்பவமே இப்படி ஒரு போலியான கேலிச் சித்திரம் வெளியாக காரணமாக இருந்திருக்கலாம்.

இந்த கேலி சித்திரம் புதியது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட, பிரதமர் மோடியை விமர்சித்து இதே கேலிச்சித்திரம் வெளியாகி இருந்தது.

பிரபல அமெரிக்க பத்திரிகையான டைமில், வெளிவந்தது போல அந்த கேலி சித்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. 2014 ஜூன் 1ம் தேதி முதல், 2016 ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மோடியின் விளம்பரத்துக்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், ரூ.1100 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குப் பால் ஊற்றி வளர்க்கும் மோடி என்று தலைப்பிட்டு இந்த வதந்தி பரவியது. இதை அமெரிக்காவின் பிரபல டைம் பத்திரிகையே சொல்லியுள்ளது போல் காண்பிக்கப்பட்டது. உண்மையில் டைம் பத்திரிகைக்கும் இந்த கேலி சித்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தற்போது, அதே கேலி சித்திரத்தில் முகத்தை மாற்றி வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர் பா.ஜ.க-வினர். இந்த கேலிச்சித்திரத்தை வெங்கடேஷ் என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் தன்னுடைய பெயருக்கு முன்பாக பி.ஜே.பி என்பதையே அடையாளமாக வைத்துள்ளார். அவருடைய பதிவுகள் அனைத்தும் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டுடனே உள்ளன. இதன் மூலம், அவர் பா.ஜ.க உறுப்பினராகவோ, அனுதாபியாகவோ இருக்கலாம் என்பது தெரிகிறது.

நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த ஆதாரங்களின் விவரம்,

1. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முடிவுகள்
2. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் இதழில் வெளியான செய்தி மற்றும் கேலிச்சித்திரத்தின் இணைப்பு.
3. சாம் பிட்ரோடோ பேட்டி.
4. சாம் பிட்ரோடோ பேட்டிக்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவின் பதில்.
5. கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடியை வைத்தே இந்த கேலி சித்திரம் வெளியானதற்கான ஆதாரம்.
6. கேலி சித்திரத்தை வெளியிட்டவரின் அரசியல் பின்னணி

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில், பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் கட்சி பால் வார்க்கிறது என்று டைம் இதழ் அட்டைப்படம் வெளியிட்டதாக கூறப்படுவது பொய் செய்தி என்பது நிரூபிக்கப்படுகிறது.

முடிவு

உரிய ஆதாரங்களின்படி, இந்த கேலி சித்திரம் மற்றும் தகவல் போலியானது என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது பார்வையாளர்கள் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:ராகுல்காந்தி பற்றி டைம் மேகசின் கேலிச்சித்திரம் வெளியிட்டதா?

Fact Check By: Praveen Kumar 

Result: False