FACT CHECK: டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயி என்று கூறி பரவும் பழைய படம்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முதியவர் ஒருவர் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. “இதெல்லாம் பாத்துட்டு எப்படியா ஒருவாய் சோறு இறங்குது..?! #கார்ப்பரேட்டுனா அவ்ளோ இனிக்குது..?!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை புருசோத்தமன் ஏகாம்பரம் என்பவர் 2021 ஜனவரி 3ம் தேதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை வெளியிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இறந்துகிடக்கும் இந்த முதியவர் புகைப்படத்துடன், பிரதமர் மோடியின் புகைப்படத்தை இணைத்து வேறு சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதில், “ஏழாம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி. ஐயா மோடி அவர்களே, டெல்லி வீதியில் இறந்து கிடக்கும் விவசாயிக்கும் உங்கள் வயசு தான்… சிறுக சிறுக எங்களைக் கொல்லுவதற்கு மொத்தமாக கொன்று விடுங்கள்… ஒரு உயிரின் மதிப்பு தெரியுமா உங்களுக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Kaaritv – காரிடிவி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜனவரி 4ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் போல பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று இறந்து கிடக்கும் விவசாயி என்று பொருள்படும் வகையில் இந்த புகைப்படத்தைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இந்த புகைப்படம் உண்மையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி உள்பட பல ஃபேக்ட் செக் ஊடகங்கள் இந்த புகைப்படம் பற்றிய உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியிருப்பது தெரிந்தது. 

அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு செய்தி, சமூக ஊடக பதிவு கிடைக்கிறதா என்று தேடினோம். தொடர்ந்து தேடியபோது 2018ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் இந்த புகைப்படம் இடம் பெற்றிருப்பதைக் காண முடிந்தது. விவசாயிகள் போராட்டம் 2020 செப்டம்பரில் தொடங்கியது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் இருப்பதால் இதற்கும் டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அதே நேரத்தில் இறந்தவர் 2018ல் நடந்த பழைய விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவரா என்று அறிய அந்த ஃபேஸ்புக் பதிவை பார்த்தோம். மொழிமாற்றம் செய்து பார்த்த போது, டார்ன் தரனின் போஹ்ரி சௌக்கில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடக்கிறார். யார் என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அறிய இந்த படத்தைப் பகிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதன் மூலம் அடையாளம் தெரியாத முதியவர் உடல் பற்றிய அறிவிப்பாக 2018ல் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம், இந்த புகைப்படத்துடன் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தியில் வேறு ஏதேனும் ஆதாரங்கள் கொடுத்துள்ளார்களா என்று பார்த்தோம். அப்போது இந்த பதிவை வெளியிட்ட நபரை தொடர்புகொண்டு விசாரித்தது தெரிந்தது. அவர், “இந்த புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவிடப்பட்டது. நான் பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் சாஹிப் நகரில் வசிக்கிறேன். அப்போது ஆள் அடையாளம் தெரியாத முதியவர் படம் போஹ்ரி சௌக் பகுதியில் எடுத்தது. இது பற்றி பதிவிட்டதும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் என்னைத் தொடர்புகொண்டனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி நினைவில்லை” என்றார்.

இதன் மூலம் 2018ல் இறந்த அடையாளம் தெரியாத முதியவர் புகைப்படத்தை 2020-21 விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2018ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் இறந்த முதியவர் படத்தை, விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைத் தகுந்த ஆதாரத்துடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயி என்று கூறி பரவும் பழைய படம்! ?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply