
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive
“மதுக்கடையை மூடுறேன், 10 மணிக்கு மேல் மது விற்பனை இல்லை என்று சொல்றாங்க, ஆனாலும் அதற்கு அப்புறம் 11, 12 மணிக்கு கூட விற்கப்படுகிறது என்பதை தெளிவாக அவங்களே எடுத்து போட்டிருக்காங்க. இதில் இருந்தே இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது… சும்மா கண்துடைப்புக்காத்தான் சொல்லியிருக்கிறாங்களே தவிர முதலமைச்சர் அதற்கு சரியான நடவடிக்கை எடுத்தாதகத் தெரியலை” என்று கனிமொழி கூறும் வீடியோ கிளிப் கொண்டு வீடியோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை realpix10 என்ற இன்ஸ்டாகிராம் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 12ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை வீடியோவை சிலர் யூடியூபிலும் பதிவிட்டுள்ளனர். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கனிமொழி பேட்டி வீடியோ உண்மையாக தெரிகிறது. அவரது குரலை எடிட் செய்ததாகவோ, டப்பிங் செய்து மாற்றியதாகவோ தெரியவில்லை. ஆனால், இந்த பேட்டியை எப்போது அளித்தார், மு.க.ஸ்டாலினை விமர்சித்தாரா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை நியூஸ் 7 தமிழ் ஜூன் 16, 2016 அன்று பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அதாவது 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016 ஜூன் மாதத்தில் அ.தி.மு.க ஆட்சி தமிழகத்திலிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: YouTube
2016ல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த நேரம் அது. தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று அப்போது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அந்த சூழலில் கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதாவை விமர்சித்து 2016ம் ஆண்டு ஜூன் மாதம் கனிமொழி அளித்த பேட்டியை, 2023ல் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேட்டி அளித்தார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2016ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை விமர்சித்து கனிமொழி அளித்திருந்த பேட்டியை தற்போது நடந்தது போல ஸ்டாலினை விமர்சித்துவிட்டார் என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
