
உலகின் நேர்மையான 50 தலைவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும், அதில் முதலிடம் காமராஜருக்கு வழங்கப்பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் காமராஜர் படத்துடன் போட்டோஷாப் முறையில் மேலேயும் கீழையும் எழுதப்பட்டிருந்தது. அதில், “உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலை அமெரிக்க வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஒரே நபர் அதுவும் முதல் இடத்தை பிடித்தவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் யாராவது பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்தோம். 2020 டிசம்பர் 15ம் தேதி Dhana Elongo என்பவர் இந்த படத்தை பகிர்ந்திருந்தார். இவரைப் போல பலரும் பகிர்ந்து வருவது தெரிந்தது. எனவே, இதைப் பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
உலகின் 50 நேர்மையான தலைவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டது என்றும், அதில் முதல் இடம் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது என்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு வதந்தி பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நேர்மையான தலைவர் பட்டியலில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்தார் என்றும் வதந்தி பரப்பப்பட்டது. இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் 2019ம் ஆண்டு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில் மீண்டும் அதே போன்ற வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு இது போன்று எந்த ஒரு பட்டியலையும் வெளியிட்டதாக தகவல் இல்லை. மேலும் மற்ற நாட்டுத் தலைவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதால் ஒப்படி ஒரு பட்டியலை வெளியிட்டிருக்க வாய்ப்பு இருக்காது என்றே தோன்றுகிறது.
ஒருவேளை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் அமைப்புகள், பத்திரிகைகள் இப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம். எனவே, கூகுளில் இது தொடர்பாக தேடிப் பார்த்தோம். ஆற்றல் மிக்க தலைவர்கள், மதிப்பு மிக்க தலைவர்கள், சிறந்த தலைவர்கள் என்று பல தலைப்புகளில் பட்டியல்களைப் பல முன்னணி ஊடகங்கள் வெளியிட்டிருப்பது மட்டுமே கிடைத்தது.

அசல் பதிவைக் காண: fortune.com I Archive 1 I fandom.comI Archive 2
நேர்மையான தலைவர்கள் பட்டியல் என்று ஒன்று நமக்கு கிடைக்கவில்லை. உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியல் பற்றி தொடர்ந்து தேடினோம். அப்போது அமெரிக்காவில் இருந்து வெளியாகும் fortune இதழில் உலகின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருவது தெரிந்தது. அந்த இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2021ம் ஆண்டுக்கான சிறந்த தலைவராக நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
விக்கிலிஸ்ட் என்ற பெயரில் நேர்மையான அரசியல் தலைவர்கள் பட்டியல் ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் முதல் இடம் கி.பி 161ம் ஆண்டில் ரோமை ஆட்சி செய்த மார்க்கஸ் அரேலியஸ் பெயர் இருந்தது.
நம்முடைய ஆய்வில், நேர்மையான தலைவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மிகச்சிறந்த தலைவர்கள், ஆளுமை மிக்க தலைவர்கள், வலிமை மிக்க தலைவர்கள் என்று பல பட்டியல்களை ஃபேர்ப்ஸ், ஃபார்ச்சூன் போன்ற ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி பட்டியல் வெளியாகிறது. மிக சமீபத்திய வெளியீடுகளில் காமராஜர்தான் நம்பர் 1 நேர்மையான தலைவர் என்று எந்த பட்டியலும் வெளியாகவில்லை.
ஏற்கனவே மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பெயரை உலகின் நம்பர் 1 நேர்மையான தலைவராக அமெரிக்கா அறிவித்ததாக வதந்தி பரவியது. அது தவறான தகவல் என்று அப்போதே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்திருந்தது. இதன் அடிப்படையில், உலகின் நம்பர் 1 நேர்மையான தலைவராக காமராஜர் பெயரை அமெரிக்கா அறிவித்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அமெரிக்கா வெளியிட்ட உலகின் டாப் 50 நேர்மையான தலைவர்கள் பட்டியலில் முதலிடம் காமராஜருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றுபகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Title:அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் காமராஜருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
