ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமுக்கு வழங்காத சிறப்பு ரயில் சேவையை ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் வழங்கியது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மேற்கொண்ட ரயில் பயண படங்களை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், "The Difference is Clear" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Rajini Vs Modi Jokes என்ற ஃபேஸ்புக் பக்கம் ஜூலை 1, 2021 அன்று பதிவிட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

Be Like Tamizha என்ற ஃபேஸ்புக் பக்கம் ஜூலை 7ம் தேதி இதே படத்தை வெளியிட்டுள்ளது. அதனுடன், "இந்திய ஜனாதிபதியாகலாம் ... ஆனால் அப்துல் கலாம் ஆக முடியாது ..!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் குடிரயசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தன் சொந்த ஊருக்கு சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்டார். இதை அடிப்படையாக வைத்து கலாமின் பழைய படத்தை ஒப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில் வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் ஜனாதிபதியாக ரயிலில் பயணம் செய்த அப்துல் கலாமுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதும், ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது போன்ற கருத்தை கூற வருவது தெரிகிறது.

யார் வேண்டுமானாலும் இந்திய ஜனாதிபதியாகலாம், ஆனால் அப்துல் கலாம் ஆக முடியாது என்றதன் மூலம் அவர் ஜனாதிபதியாக மிக எளிமையாக ரயிலில் பயணம் மேற்கொண்டார் என்பது போலவும், ராம்நாத் கோவிந்த் சிறப்பு ரயிலில் பயணம் செய்தது போன்றும் தோற்றம் ஏற்படுகிறது. எனவே, இந்த இரு புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I newindianexpress.com I Archive 2

முதலில் அப்துல் கலாம் சாதாரண ரயிலில் பயணம் செய்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று கிடைத்தது. அதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2010ம் ஆண்டு புவனேஷ்வரில் இருந்து ரூர்கேலாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வேறு ஒருவர் வெளியிட்டிருந்த இந்த படத்தை அப்துல்கலாம் சென்டர் கூட ஷேர் செய்திருந்தது.

அதில், வானிலை காரணமாக புவனேஷ்வரில் இருந்து ரூர்கேலாவுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்ட தருணம் என்று பதிவாளர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது இந்த படம் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: timesnownews.com I Archive 1 I presidentofindia.nic.in I Archive 2 I alamy.com I Archive 3

ஜனாதிபதியாக அப்துல் கலாம் இருந்த போது மேற்கொண்ட ரயில் பயணங்கள் பற்றித் தேடினோம். அப்போது ராம்நாத் கோவிந்த் ரயில் பயணம் மேற்கொள்வதையொட்டி டைம்ஸ் நவ் வெளியிட்டிருந்த புகைப்பட செய்தி பதிவு ஒன்று கிடைத்தது. அதில், 2003ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் பீகார் மாநிலத்தில் சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்டார் என்று படம் வெளியிட்டிருந்தனர். அதன் பிறகு 2004ம் ஆண்டில் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த புகைப்படம் குடியரசுத் தலைவர் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்த போது அவருக்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில்,

அப்துல் கலாம் ரயிலில் பயணம் செய்த படம் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2010ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவர் பயணம் செய்யவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குடியரசுத் தலைவர்களுக்கான பயணத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது உறுதியாகிறது.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மேற்கொண்ட ரயில் பயண படத்தையும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவித் ரயிலில் பயணம் செய்த படத்தையும் ஒப்பிட்டிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது பயணம் செய்த படத்தை வெளியிட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது. அல்லது, இந்த படம் 2010ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்திருந்தால் ஒப்பீடு குழப்பம் ஏற்பட்டிருக்காது. இதன் அடிப்படையில் போதுமான தகவல் அளிக்காமல் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல் கலாம் ரயிலில் பயணம் செய்த படத்தையும் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த ரயிலில் பயணம் செய்த படத்தையும் ஒப்பிட்டிருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அப்துல் கலாமுக்கு சாதாரண ரயில்; ராம்நாத் கோவிந்துக்கு மட்டும் சிறப்பு ரயில் விடப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: Missing Context