
வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நன்றி தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஆகியோர் தமிழ் நாடு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்திக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்தாதற்கு நன்றி தெரிவித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கு விசிகவினர் வாழ்த்து தெரிவித்தனர்…! நம்புங்க இவனுங்கள தான் ஜெயிக்க வச்சீங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை PMK Forever என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜூலை 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ் நாடு சட்டமன்றத்தில் மசோதா கடந்த அ.தி.மு.க ஆட்சியின் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்டது. சாதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிப்புக்குப் பிறகு ஆறு மாதங்கள் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும் என்று அப்போது தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரை சிவசங்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்தாதற்கு நன்றி தெரிவித்தார்கள் என்று சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக திருமாவளவன் போராடி வருகிறார். அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர் ஏன் வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு ஏன் நன்றி தெரிவிக்கப் போகிறார் என்று கேள்வி எழுந்தது. அப்படியே நன்றி தெரிவிப்பவர் அதை எழுத்து மூலமாக மனுவாக வழங்கியா தெரிவிப்பார் என்ற கேள்வியும் எழுந்தது.
எனவே, இந்த சந்திப்பு எங்கு, எப்போது நடந்தது என்று ஆய்வு செய்தோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்தோம். ட்விட்டரில் அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “இந்திய OBC பட்டியலில் தமிழகத்தைச் சார்ந்த ஆயிர வைசியர், சேர்வை போன்ற பல சாதிப் பெயர்கள் இடம்பெறவில்லை. இது குறித்து ஆய்வுசெய்து விடுபட்டுள்ள சாதிப் பெயர்களைக் கண்டறிந்து அவற்றை ஓபிசி பட்டியலில் இணைக்க வேண்டுமென தோழர் ரவிக்குமார் அமைச்சர் சிவசங்கர் அவர்களிடம் மனு கொடுத்தார்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த படங்களை வெளியிட்டு, அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை பற்றி விரிவாக எழுதியிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
படத்தை வெளியிட்டவர்களே ஒபிசி பட்டியலில் விடுபட்ட சாதிப் பெயர்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்படி இருக்கும்போது நன்றி தெரிவித்தார்கள் என்று எதன் அடிப்படையில் பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர், “இது தவறான தகவல். விடுபட்ட சாதியினர் பெயரை சேர்ப்பது தொடர்பான கோரிக்கை மட்டுமே விடப்பட்டது” என்றார்.
இதன் அடிப்படையில் வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாதற்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு அமைச்சர் சிவசங்கரை சந்தித்து தொல் திருமாவளவன் நன்றி கூறினார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதற்கு நன்றி தெரிவித்தாரா தொல் திருமாவளவன்?
Fact Check By: Chendur PandianResult: False
