FACT CHECK: தமிழ் நாட்டில் பெண் காவலர்களுக்கு முதன் முறையாக நடமாடும் கழிவறைகளை தி.மு.க அரசு உருவாக்கியதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கு முதன் முறையாக நடமாடும் கழிவறை வசதியை தி.மு.க அரசு உருவாக்கியது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பெண் காவலர்களுக்கான நடமாடும் கழிவறை வாகன புகைப்படத்துடன் கூடிய கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், “பெண் போலிஸாரின் நலனுக்காக நடமாடும் கழிவறை வாகன வசதியை ஏற்படுத்தியுள்ளது தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “முதன் முதலாக தமிழ்நாட்டில் பெண் காவலர்களை உருவாக்கியது முத்தமிழினத்தலைவர் Dr.கலைஞர் அவர்கள்.., முதன் முதலாக தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கு நடமாடும் ரெஸ்ட் ரூம் உருவாக்கியது நம் தமிழ்நாட்டு முதல்வர் தளபதியார் அவர்கள்.., 🖤#வரலாறு_போற்றும்_தலைவர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை தாரிக் திமுக இளைஞரணி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 30ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நியூஸ் கார்டில் குறிப்பிட்டது போன்று, பெண் போலீசாருக்கு நடமாடும் கழிவறை வசதியை தி.மு.க அரசு ஏற்படுத்தியுள்ளது என்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆனால், “முதன் முதலாக இந்த வசதியை தி.மு.க அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்ற தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தி.மு.க ஆட்சிதான் முதன் முதலில் பெண் காவலர்களுக்கான நடமாடும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முன்னதாக கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான நியூஸ் கார்டை பார்த்தோம். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நமக்கு இந்த நியூஸ் கார்டு கிடைத்தது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் பெண் போலிஸாரின் நலனுக்காக நடமாடும் கழிவறை வாகனம் அறிமுகம்!” என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் முதன் முறையாக இப்போதுதான் கழிவறை வசதி ஏற்படுத்தியது போன்ற கருத்தை இவர்கள் தெரிவித்திருப்பது தெரியவந்தது.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பு பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி இல்லையா என்று அறிய கூகுளில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, 2016ம் ஆண்டு ஊட்டியில் போலீசாருக்கான நடமாடும் கழிப்பறை வாகனங்கள் இயக்கம் என்ற செய்தி கிடைத்தது. அந்த படத்திலேயே பெண்கள் கழிப்பறை என்று தெளிவாக இருப்பதைக் காண முடிந்தது. 2016ம் ஆண்டு என்பது அ.தி.மு.க ஆட்சியில் இருந்த நேரம். இதன் மூலம் 2021க்கு முன்பு இருந்தே பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி இருப்பது தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: maalaimalar.com I Archive

இந்து தமிழ் கடந்த 2021 ஜனவரி 12ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில் சேலம் மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பயன்படுத்த நடமாடும் நவீன கழிவறை வாகனங்கள் வழங்கப்பட்டது என்ற செய்தி கிடைத்தது. இந்த வாகனத்தை பார்வையிட்ட சேலம் மாநகர காவல் துறை ஆணையர், “ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு தனித்தனி கழிவறை வசதிகள் உள்ளன” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். 2021 ஜனவரி என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அசு இருந்த நேரம் ஆகும்.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I hindutamil.in I Archive 2

2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளியான இந்து தமிழ் செய்தி ஒன்று கிடைத்தது. அதில், “பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மகளிர் போலீஸாருக்காக ‘நிர்பயா’ நிதியில் ரூ.2 கோடியில் 15 நடமாடும் கழிவறை வாகனங்கள்- சென்னை மாநகராட்சி வாங்குகிறது” என்று இருந்தது. 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பு இருந்தே பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி இருந்துள்ளது உறுதியாகி உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பெண் காவலர்களுக்கு கழிப்பறை வசதி அறிமுகம் செய்யப்பட்டது என்ற தகவல் தவறானது ஆகும். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தி.மு.க ஆட்சியில் பெண் காவலர்களுக்கு என்று நடமாடும் கழிவறை வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ் நாட்டில் பெண் காவலர்களுக்கு முதன் முறையாக நடமாடும் கழிவறைகளை தி.மு.க அரசு உருவாக்கியதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False