IMDb ரேட்டிங்கில் தி ஷஷாங் ரிடம்ஷன் என்ற ஹாலிவுட் படத்தை பின்னுக்குத் தள்ளி ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்தது என்ற செய்தியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I abplive.com I Archive 2

ஜெய் பீம் படத்தின் சாதனை… ஐஎம்டிபி-யில் முதலிடம் பிடித்தது என்று செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தியை கிளிக் செய்து பார்த்த போது, “முதல் 250 படங்கள் பட்டியலில் எந்தவொரு தமிழ் படமும் இதுவரை இடம்பெற்றதில்லை. தற்போது முதல்முறையாக ஐஎம்டிபி பட்டியலில் ஜெய் பீம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இப்படம். 53,000 வாக்குகள் பெற்று, 9.6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பின் 'தி ஷஷாங் ரிடம்ஷன்' திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை ABP Nadu நவம்பர் 9, 2021 அன்று பதிவிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெய்பீம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த சூழலில், ஐஎம்டிபி சர்வதேச திரைப்பட ரேங்கிங்கில் ஜெய் பீம் முதல் இடத்தைப் பிடித்தது என்று செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஏபிபி நாடு, இந்து தமிழ் திசை உள்பட பல ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: imdb.com I Archive

imdb.com இணையதளத்துக்கு சென்று ஜெய் பீம் முதலிடத்தைப் பிடித்ததா என்று பார்த்தோம். ஆனால் டாப் ரேட்டட் படங்கள் வரிசையில் முதலிடத்தில் ஜெய் பீம் படம் இல்லை. தி ஷஷாங் ரிடம்ஷன் (The Shawshank Redemption) படம்தான் 25 லட்சம் பேரின் மதிப்பீடுகளுடன் 10க்கு 9.3 பெற்று முதலிடத்தில் இருந்தது. ஜெய் பீம் படம் எந்த இடத்தில் உள்ளது என்று பார்த்தோம். 8.2 புள்ளி மதிப்பீட்டுடன் 139வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். 64 ஆயிரம் பேர் ஜெய் பீம் படத்தை மதிப்பீடு செய்திருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.

அதே நேரத்தில் ஜெய் பீம் படத்துக்கு 64 ஆயிரம் பேர் அளித்த மதிப்பீடு அடிப்படையில் அதன் ரேட்டிங் 9.6 என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது தனிப்பட்ட படம் என்ற வகையில் ரசிகர்கள் மதிப்பீடு 9.6. ஆனால், டாப் 250 படங்கள் வரிசையில் அதன் மதிப்பீடு 8.2 என்று வகைப்படுத்தி வைத்திருந்தனர்.

இது தொடர்பாக திரைப்பட ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். ”ஐஎம்டிபி ரேட்டிங் என்பது எவ்வளவு பேர் ரேட்டிங் செய்தனர், எவ்வளவு பேர் 10க்கு 10 வழங்கினர், எவ்வளவு பேர் 10க்கு 9, 8, 7, 6 என 1 வரை வழங்கினர், பெற்ற விருதுகள், வெளியான ஆண்டு என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. தி ஷஷாங் ரிடம்ஷன் திரைப்படம் 1994ம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு 24.84 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அதில்,13 லட்சம் பேர் 10க்கு 10 மதிப்பெண் வழங்கியுள்ளனர். இது கிட்டத்தட்ட 55 சதவிகிதம் ஆகும். இதன் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் ரசிகர்களின் ரேட்டிங் இதற்கு 9.3 ஆகும்.

அசல் பதிவைக் காண: imdb.com I Archive 1 I imdb.com I Archive 2

ஜெய் பீம் படத்துக்கு 64 ஆயிரம் பேர் ரேட்டிங் செய்துள்ளனர். அதில் 60 ஆயிரம் பேர் அதாவது 88 சதவிகிதம் பேர் 10க்கு 10 வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் அதன் ரேட்டிங் 9.6 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதிகம் ரேட்டிங் செய்யப்பட்ட டாப் 250 படங்கள் வரிசை என்று வரும் போது, ஒட்டுமொத்தமாக எவ்வளவு பேர் ரேட்டிங் செய்துள்ளனர், 10க்கு 10 எவ்வளவு பேர் ரேட்டிங் செய்துள்ளனர், தொடர்ந்து இந்த இணையதளத்துக்கு வருகை தருபவர்களில் எத்தனை பேர் குறிப்பிட்ட படத்துக்கு ரேட்டிங் செய்துள்ளனர், வசூல், விருது என பல்வேறு விஷயங்களை கணக்கில் கொண்டு பட்டியலிடப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜெய் பீம் படத்துக்கு 8.2 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. தி ஷஷாங் ரிடம்ஷன் படத்துக்கு 9.2 ரேட்டிங் கிடைத்துள்ளது. தி ஷஷாங் ரிடம்ஷன் படத்தை பின்னுக்குத் தள்ளி ஜெய் பீம் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு பல காலம் ஆகும். லட்சக் கணக்கானோர் அதற்கு ரேட்டிங் செய்ய வேண்டும்" என்றார்.

ஏபிபி நாடு, இந்து தமிழ் திசையில் ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்ததாக ஐஎம்டிபி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட் இருந்தது. அது என்ன என்று பார்த்தோம். அது டாப் 250 படங்கள் பட்டியல்தான்.

ஆனால் டாப் 250 ரேட்டிங் இல்லை. டாப் 250 படங்களை ஏ,பி,சி அடிப்படையில் வகைப் படுத்துவது, பிரபலமான படம் என்ற அடிப்படையில் வகைப்படுத்துவது, பார்வையாளர்கள் அளித்த தனிப்பட்ட படத்துக்கான ரேட்டிங் அடிப்படையில் வகைப்படுத்துவது, போன்ற வகைப்படுத்தும் (Sort) வசதியாகும். டாப் 250ல் முதலிடம் வழங்கப்பட்டது என்ற அர்த்தம் இல்லை என்பது புரிந்தது.

அசல் பதிவைக் காண: imdb.com I Archive

ஐஎம்டிபி ரேட்டிங்கில் ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்ததாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவுகிறது என்று புதிய தலைமுறையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதைப் பார்த்தோம். அதில், "சினிமா தகவல்களை கொண்ட புகழ்பெற்ற வலைத்தளம் ஐஎம்டிபி. ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலான திரைப்படங்களின் விமர்சனங்கள், தகவல்கள், ரேட்டிங் இடம்பெற்றிருக்கும் தளம் இது. இந்த இணையதளத்தில் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற முதல் 250 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் நடிகர் சூர்யாவின் 'ஜெய் பீம்' படமும் தற்போது இடம்பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் சிலர் 'ஜெய் பீம்' திரைப்படம் 9.6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது என்றும், இந்தப் படத்துக்குப் பின் தான் 'தி ஷஷாங் ரிடம்ஷன்' திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது என்றும் தவறாக பதிவிட்டு வருகின்றனர். 'தி ஷஷாங் ரிடம்ஷன்' படம் 24 லட்சம் வாக்குகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது" என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

அசல் பதிவைக் காண: Facebook I Twitter I Archive

சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஜெய் பீம் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். ஜெய் பீம் படம் வாசகர்கள் ரேட்டிங் அடிப்படையில் 9.6 புள்ளிகள் பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், முதலிடம் பிடித்தது என்ற தகவல் தவறான அர்த்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. டாப் 250 படங்கள் வரிசையில் ஜெய் பீம் முதல் இடத்தை பிடிக்கவில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தோம்.

டாப் 250 படங்கள் ரேட்டிங் எப்படி செய்யப்படுகிறது என்று ஐஎம்டிபி இணையதளத்தில் தேடிப் பார்த்தோம். அதன் எஃப்.ஏ.க்யூ பக்கத்தில் ரேட்டிங் தொடர்பான விளக்கத்தை அளித்திருந்தனர். 9.4 ரேட்டிங் பெற்ற படம் கூட டாப் 250 திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெறுவது இல்லையே ஏன் என்று கேள்வி எழுப்பி அதற்கு பதில் அளித்திருந்தனர்.

அதில் "டாப் ரேட்டட் திரைப்படங்கள் பக்கமானது ஐஎம்டிஏ இணையதளத்துக்கு தொடர்ந்து வந்து விமர்சனம், ரேட்டிங் செய்பவர்களின் ரேட்டிங் அடிப்படையில் முடிவு செய்யப்படும். தனிப்பட்ட படங்களுக்கான வாசகர் ரேட்டிங்கிற்கும், டாப் 250 ரேட்டிங்கிற்கும் இடையே வேறுபாடு ஏற்பட இதுவே காரணம். டாப் ரேட்டட் 250 படங்கள் பட்டியலை சிறப்பாக பராமரிக்க, ஒரு நபர் தொடர்ந்து வரக் கூடிய வாசகர் என்பதை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கிறோம் என்பதை வெளியிடவில்லை" என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: help.imdb.com I Archive

நம்முடைய ஆய்வில், ஐஎம்டிபி டாப் திரைப்படங்கள் ரேட்டிங்கில் ஜெய் பீம் படத்துக்கு முதலிடம் வழங்கப்படவில்லை. 139வது இடத்துக்கு அது முன்னேறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sort வசதியில் கிடைத்த முடிவை, ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்துவிட்டது என்று ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய் பீம் இந்திய திரைப்படங்கள் அளவில் முதலிடம் பிடித்ததாக செய்திகள் வெளியாகி இருப்பது நமக்குக் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் ஐஎம்டிபி திரைப்படங்கள் தர வரிசையில் ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஐஎம்டிபி தர வரிசையில் ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:IMDb ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்ததா ஜெய்பீம்?

Fact Check By: Chendur Pandian

Result: False