
நீட் தேர்வில் வெற்றி பெற்ற வட இந்திய மருத்துவர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மருத்துவர் ஒருவர் கண்கள் மீது ஸ்டெதஸ்கோப் கருவியை வைத்து பரிசோதிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வடநாட்டு கண் டாக்டர்” என்று தமிழில் உள்ளது. இந்த பதிவை ஆனந்த சித்தர் என்பவர் 2021 செப்டம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கண்கள் மீது ஸ்டெதஸ்கோப் வைத்து பார்ப்பது நமக்கு வித்தியாசமாக தெரிகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர் ஆனவர் என்று குறிப்பிட்டு பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். இருப்பினும், மருத்துவத் துறையில் இப்படி ஏதும் வழக்கம் உள்ளதா இல்லையா என்று தெரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது சரியானது இல்லை. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மூத்த கண் நல மருத்துவர் திரிவேணியைத் தொடர்புகொண்டு விசாரித்தோம்.இந்த படத்தை அவருக்கு அனுப்பி, கண்களில் இப்படி ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதனை செய்வது உண்டா என்று கேட்டோம். அதற்கு அவர், கண்களில் புற்றுநோய் கட்டி உள்ளிட்ட சில பிரச்னைகளுக்கு ஸ்டெதஸ்கோப்பை கண்ணில் வைத்து பரிசோதிப்பது வழக்கம்தான்” என்றார்.
இந்த புகைப்படம் தொடர்பாக வேறு ஏதும் தகவல் கிடைக்கிறதா என்று ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மெடிக்கல் ஆன்லைன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்துடன் பதிவு ஒன்றை மருத்துவர் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
அதில், “மருத்துவர் ஒருவர் கண்ணின் மீது ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் படத்தை, மிகவும் அறிவார்ந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் பாலங்கீர் (ஒடிஷா மாநிலம்) பிபிஎம்சிஎச் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் இருப்பவர் உதவி பேராசிரியர். cranial அல்லது ocular bruits என்ற பிரச்னைக்காக பரிசோதனை செய்கிறார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மருத்துவம் படிக்காமலேயே உங்களுக்கு மருத்துவ அறிவியல் முழுவதும் தெரியும் என்றால் நீங்கள் எதற்காக மருத்துவரை சந்திக்க வருகின்றீர்கள்? வீட்டிலேயே அமர்ந்து நீங்களாக மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே. உங்களுக்கு தெரியாத ஒன்றைப் பற்றி, உங்கள் சொந்த சமூக உறுப்பினரைக் கேலி செய்வதை விட்டுவிட்டு, கூகுளில் அல்லது மருத்துவ புத்தங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். மருத்துவரின் மரியாதையை கெடுக்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.
அவர் கூறியது போன்று கண்களில் ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதிக்கப்படும் சில சிகிச்சைகள் பற்றி தேடினோம். பல தகவல் நமக்கு கிடைத்தன.
நம் ஊர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதே போன்று கண்ணில் ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் படத்தை வைத்து கேலியான பதிவுகள் பரவி வருவதும், அது பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்த தகவலும் நமக்குக் கிடைத்தது.
இதன் மூலம், கண் புற்றுநோய் உள்ளிட்ட சில வகையான கண் நோய் தொடர்பாக ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் வழக்கமான நடைமுறையை தவறாக புரிந்துகொண்டு, நீட் தேர்வில் வெற்றி பெற்ற கண் மருத்துவர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர் ஆன நபர் கண்கள் மீது ஸ்டெதஸ்கோப் வைத்து தவறான சிகிச்சை அளித்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வட இந்திய மருத்துவர் படமா இது?
Fact Check By: Chendur PandianResult: False
