
‘’இந்திய நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் அவை கூடும் இடம் தவிர மற்றவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், ‘’தற்போது நாடாளுமன்ற அவை கூடும் இடம் மட்டும் அரசுக்குச் சொந்தமானது, அதன் அருகில் உள்ள அமைச்சக பிரிவின் தனி அலுவலகம் அனைத்தும் காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானது. வாடகை செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல, நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டிய அமைச்சக அலுவலகங்கள் செயல்படும் இடங்கள் காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானவை என்பதில் உண்மையில்லை. நாடாளுமன்ற வளாகம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் (1921-1927) கட்டப்பட்டதாகும். ஆனால், தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்த வளாகத்திலேயே அமைச்சக அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது.
எனவே, வெளியிடங்களில் (சுமார் 47 கட்டிடங்கள்) அமைச்சக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்துமே தனியாருக்குச் சொந்தமானவை என்று சொல்லிவிட முடியாது. அதாவது, மத்திய அரசின் இதர துறைகளுக்குச் சொந்தமான கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து, நாடாளுமன்ற பணிகளுக்கும், அமைச்சக பணிகளுக்கும் பயன்படுத்துவது என இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதி (Sansad Marg) முழுக்க முழுக்க பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். அவை அனைத்தையும் பராமரிக்க தனிச் சட்டமே உள்ளது.
இதுதொடர்பாக, நாம் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குமாரதேவனிடம் விளக்கம் கேட்டோம். அவர், ‘’நாடாளுமன்ற வளாகம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாகும். நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த நிலையில், நாடாளுமன்றம் உள்பட நாடு முழுக்க உள்ள பாரம்பரியமான கட்டிடங்களை பாதுகாப்பதற்கு, தனி சட்டமே உள்ளது. இதுதவிர, நாடாளுமன்ற வளாகம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகும். தொல்லியல் துறை, மத்திய அரசின் கீழ் செயல்படுவதாகும். எனவே, மத்திய அரசின் இடம்தான் அது என்பதில் சந்தேகமில்லை,’’ என்றார்.
மேலும், மக்களவை, மாநிலங்களவை இயங்குவதிலும் இட நெருக்கடி உள்ளதால், அவற்றை சமாளிக்கும் வகையில், அமைச்சக அலுவலகங்கள் என அனைத்தும் ஒரே வளாகத்தில் இயங்கும் வகையிலேயே, புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் பணிகளை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
வாடகை பிரச்னை மட்டுமல்ல, இட நெருக்கடி, 100 ஆண்டுகளுக்கும் பழமையான கட்டிடத்தில் நாடாளுமன்றம் இயங்குவது, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பலவற்றை கருத்தில் கொண்டே மத்திய அரசு (பாஜக) புதிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கான தேவை பற்றி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
The Hindu Link I The Print Link I Livelaw link
எனவே, புதிய நாடாளுமன்ற வளாகம் அமைப்பதால் காங்கிரஸ் கட்சியினருக்கு வாடகை தரவேண்டியிருக்காது, என பகிரப்படும் மேற்கண்ட கருத்தில் முழு உண்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:இந்திய நாடாளுமன்ற வளாகம் காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானதா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
