FACT CHECK: காசியில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்த போது 45 இந்து கோயில்கள் கண்டெடுக்கப்பட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

காசியில் விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து கங்கை நதி வரையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்த போது  பழமையான 45 இந்து கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்டைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர், வீடியோ ஒன்றை நம்டைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு அனுப்பியிருந்தார். அதனுடன், “முக்கிய நியூஸ்… காசி விஸ்வநாத் கோயிலிலிருந்து கங்கை நதி வரை சாலையின் அகலத்தை  அதிகரிக்கும் பொருட்டு, சாலையில் வரும், 80 முஸ்லிம்களின் வீடுகளை மோடி அரசு வாங்கத் தொடங்கினர். 

இந்த வீடுகள் இடிக்கப்பட்டபோது, அதில் 45 பழைய கோயில்கள் காணப்பட்டன. ரங்கசீப் அசல் காசி விஸ்வநாத் கோயிலை கியான்வாபி மசூதியாக மாற்றியபோது, அவர் தனது வீரர்களில் சிலருக்கு மசூதியை சுற்றி வாழ ஒரு இடத்தைக் கொடுத்து, அருகிலுள்ள சிறிய கோயில்களை ஆக்கிரமித்து, இந்த கோவில்களில் தங்கள் வீடுகளைக் கட்டினார். 

இப்போது பிரதமர் மோடி இந்த முகலாய இராணுவத்தின் அனைத்து ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளையும் அகற்றிவிட்டதால், உலகிற்கு என்ன கிடைத்துள்ளது என்று பாருங்கள்… பண்டைய கோவில்களின் 45 பொக்கிஷங்கள்… இதன் வீடியோவைப் பாருங்கள்” என்ற பதிவையும் அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

இதன் அடிப்படையில் ஃபேஸ்புக்கில் தேடினோம். அகில இந்துசேவா மக்கள் கட்சி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ருக்மணி எஸ்.ராஜா என்பவர் 2021 ஜூலை 5ம் தேதி இந்த வீடியோ – பதிவை பகிர்ந்திருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோ மற்றும் பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. 

உண்மை அறிவோம்:

காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து கங்கை நதிக்கு செல்ல சாலை அகலப்படுத்தும் திட்டம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று கூறப்படுகிறது. 

இந்த சூழலில் வைரலாக பகிரப்பட்டு வரும் மேற்கண்ட வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல ஆண்டுகளாக இந்த வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும், இது தொடர்பாக சில ஃபேக்ட் செக் ஊடகங்கள் கட்டுரை வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது.

அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் ஆய்வு மேற்கொண்டோம். கூகுளில் காசி விஸ்வநாதர் கோவில் காரிடார், வீடுகள் இடிப்பு, இந்து கோவில்கள் கண்டுபிடிப்பு என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம்.

அப்போது சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகள் இடிக்கப்பட்டதும், அவற்றுக்கு இடையே 60க்கும் மேற்பட்ட சிறிய கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்தி கிடைத்தது. இதில் 30 கோவில்கள் பற்றி ஸ்கந்த புராணத்தில் குறிப்பு உள்ளதாகவும் ஶ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் தலைமை செயல் அலுவலர் கோரங் ரத்தி கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive 1 I thehindu.com I Archive 2

இந்து நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியில் இந்த சாலை பணிக்காக 296 வீடுகள், கடைகள் அடையாளம் காணப்பட்டு இடிக்கப்பட்டது. இதில், ஏராளமான கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இவை அனைத்தும் இந்துக்களின் வீடுகள். ஒரு இஸ்லாமியரின் வீட்டைக் கூட தொடவில்லை என்று இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: bbc.com I Archive

தொடர்ந்து தேடிய போது பிபிசி தமிழ் வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்தது. அதில், காசி விஸ்வநாதர் சிறப்பு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயலதிகாரி விஷால் சிங்கிடம் பேட்டி கண்டு வெளியிட்டிருந்தனர். அவர், “இந்த சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக நாங்கள் கையகப்படுத்திய 249 வீடுகளும் இந்து சமயத்தை சார்ந்தவர்களுக்கு சொந்தமானது. அவற்றில் இதுவரை 183 வீடுகளை இடித்துள்ளதில், சிறியது முதல் பெரியது வரை மொத்தம் 23 கோயில்களை கண்டறிந்துள்ளோம்” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்ந்து தேடிய போது சாலை விரிவாக்கத்துக்காக வீடு, கடைகளை இழந்தவர்கள் பெயர் பட்டியல், இழப்பீடு பெற்றவர்களின் பட்டியல் காசி விஸ்வநாதர் சிறப்பு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது என்ற தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேடி எடுத்தோம். அதில் பெயர்கள் அனைத்தும் இந்தியில் இருந்தன. இந்தி தெரிந்த நண்பர்கள் மூலமாக பார்த்த போது, இஸ்லாமியப் பெயர் எதுவும் இல்லை என்றனர்.

அசல் பதிவைக் காண: skvparishad.org I Archive

இதன் மூலம் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து கங்கைக் கரை வரை நடந்த சாலை விரிவாக்கப் பணிக்காக இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. இந்த வீடுகள் அனைத்தும் இந்துக்களிடமிருந்து பெற்றதாக காசி விஸ்வநாதர் ஆலய சிறப்பு மேம்பாட்டு ஆணையத் தலைவர் பேட்டி அளித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்த போது, உள்ளே இந்து கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தவறான தகவல் என்பது உறுதியாகிறது.

முடிவு:

காசியில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்த போது வெளிப்பட்ட கோவில் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காசியில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்த போது 45 இந்து கோயில்கள் கண்டெடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False