சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை பிரான்ஸ் அரசு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

சாலையில் தொழுகையில் ஈடுபட்ட நபர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைக்க பயன்படுத்தப்படும் வாகனத்தைப் பயன்படுத்தி தண்ணீர் அடிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அமைதியான முறையில் தொழுகை நடத்தும் முஸ்லீம்களைத் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கோழை பிரான்ஸ் அரசு இதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை Syed Z என்பவர் 2020 அக்டோபர் 28ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இந்த வீடியோவை பிரான்சில் நடந்தது என்று பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரான்ஸ் நாட்டில் முகமது நபி தொடர்பான கேலி சித்திரத்தை மாணவர்களிடம் காட்டியதற்காக பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்னை வெடித்துள்ளது. பிரான்ஸ் அதிபருக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாலையை மறித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்து பிரான்ஸ் அரசு கலைத்தது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிரான்ஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், பிரான்ஸ் அரசின் நடவடிக்கையை பாராட்டியும் பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு நடத்தினோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அதில் நமக்கு சரியான முடிவுகள் கிடைக்காத நிலையில் yandex.com புகைப்படம் தேடல் தளத்தில் அந்த புகைப்படங்களை பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை இணையதளம் ஒன்று ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது.

அதில், "Gaz bombalı 'sivil Cuma namazı - Yüksekova - Gever" என்று இருந்தது. அதை மொழிபெயர்ப்பு செய்து பார்த்த போது, யுகசெகோவாவில் (Yüksekova) வெள்ளிக்கிழமை நடந்த பொது மக்களின் தொழுகை தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீசி கலைக்கப்பட்டது என்று இருந்தது. யுகசெகோவா என்பது எங்கே உள்ளது என்று தேடினோம். அது துருக்கியில் இருப்பது தெரிந்தது. துருக்கி ஒரு இஸ்லாமிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு கிடைத்த கீ வார்த்தைகளைக் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது, இதன் யூடியூப் வீடியோவும் கிடைத்தது. Yüksekova Haber Portalı என்ற சேனல் 2012 நவம்பர் 9ம் தேதி அதை பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது.

துருக்கி மொழியில் இருந்த தகவலை கூகுளில் டைப் செய்து தேடிய போது, 2012ம் ஆண்டு வெளியான செய்திகள் கிடைத்தன. உள்ளூர் பிரச்னைகளை முன்னிருத்தி தொழுகைக்குப் பிறகும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். இதில் பெண்களும் பாதிக்கப்பட்டனர் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: yuksekovahaber.com.tr I Archive 1 I haberturk.com I Archive 2

அந்த செய்திகளில் தொழுகை நடைபெற்ற படங்களும் இடம் பெற்றிருந்தன. அவர்கள் தொழுகை நடத்தியபோது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதா அல்லது போராடியதால்தான் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவிரும்பவில்லை. இந்த வீடியோ பிரான்சில் எடுக்கப்பட்டது இல்லை என்பதும், தற்போது பிரான்சில் நடந்து வரும் பிரச்னைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது மட்டும் உறுதி செய்யப்படுகிறது.

நம்முடைய ஆய்வில்,

தொழுகை நடத்திய மக்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வீடியோ 2012ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.

இந்த வீடியோ துருக்கியில் எடுக்கப்பட்டது என்பதும், இதற்கும் பிரான்ஸ்க்கும் தொடர்பில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

தொழுகை நடத்தியதால் தாக்குதல் நடத்தப்படவில்லை, தொழுகைக்குப் பிறகு போராட்டம் நடத்தியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக 2012ம் ஆண்டு வெளியான துருக்கி நாட்டு செய்திகளில் கூறப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

இதன் அடிப்படையில், தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது பிரான்ஸ் அரசு தண்ணீர் பீய்ச்சி அடித்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

துருக்கியில் 2012ம் ஆண்டு நடந்த நிகழ்வை தற்போது பிரான்சில் நடந்தது போன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இஸ்லாமியர்களை தண்ணீர் அடித்து விரட்டிய பிரான்ஸ் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False