FACT CHECK: ஐ.சி.எஃப் பணிகளுக்கு வட மாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?
ஐ.சி.எஃப் ரயில்வே பணிகளுக்கு வட இந்தியர்கள் விண்ணப்பிக்க அனுமதியில்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
தினத்தந்தியில் வெளியான செய்தி ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், "ஐ.சி.எப். ரெயில்வே பணி: வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை. தமிழக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய முடிவு" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நிலைத் தகவலில், "இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி...... இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி..... இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி....." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை V.Senthilbalaji Team என்ற ஃபேஸ்புக் ஐடி 2021 மே 28ம் தேதி பதிவிட்டிருந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
நெல்பேட்டை பிஸ்மி என்பவர் வெளியிட்டிருந்த பதிவில், "ICF ரயில்வே பணி வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 🔥போடுடா வெடியை" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பலரும் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது போல பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஐ.சி.எஃப் என்பது மத்திய அரசின் ரயில்வே துறைக்கு சொந்தமானது. இதற்கு மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்தார் என்று பலரும் செய்தி பரப்பி வருவது வியப்பாக இருந்தது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததால்தான் மத்திய அரசு பணிந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருவதையும் காண முடிந்தது.
செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பார்க்கும்போது தினத்தந்தி வெளியிட்ட செய்தி என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. எனவே, மே 26, 2021 அன்று வெளியான தந்தி செய்தித்தாளைப் பார்த்தோம். அதில் இந்த செய்தி இல்லை. அதன் இ-பேப்பர் பக்கத்துக்கு சென்று வெவ்வெறு பதிப்புகளை பார்வையிட்டோம். எதிலும் இந்த செய்தி இல்லை.
ஐ.சி.எப் ரெயில்வே வேலை, வட மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்த ஸ்கிரீன்ஷாட்டை அடிப்படையாகக் கொண்டு சிறிய அளவில் செயல்படும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. வெவ்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடியபோது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நியூஸ் 18 செய்தி ஒன்று கிடைத்தது.
அசல் பதிவைக் காண: news18.com I Archive
"சென்னை ஐ.சி.எப்-ல் தொழில் பழகுநர் பணி... தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. தினத்தந்தி வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளே அப்ரண்டிஸ் பணிக்கான விண்ணப்பங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த இரண்டும் ஒன்றாக இருக்கும் என்று தெரிந்தது. மேலும் 510 அப்ரண்டிஸ் பணியிடங்கள் உள்ளதாக தினத்தந்தி செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். நியூஸ் 18 வெளியிட்டிருந்த செய்தியில் ஐ.சி.எஸ் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதிலும் 510 இடங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த தொழில் பழகுநர் இடங்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் ஐ.சி.எஃப் இணையதளத்துக்கு சென்று தற்போது புதிதாக அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறதா, அது பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அது போன்ற அறிவிப்பு அதில் இல்லை.
இந்த தினத்தந்தி ஸ்கிரீன்ஷாட்டில் கீழே, "கம்யூனிஸ்டு கட்சி தோல்விக்கு" என்று காண முடிந்தது. அதை வைத்து தினத்தந்தியில் தேடினோம். 2019ம் ஆண்டு மே 26ம் தேதி இந்த தலைப்பில் செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. "கம்யூனிஸ்டு கட்சி தோல்விக்கு ‘சபரிமலை விவகாரம் காரணம் இல்லை’ பினராயி விஜயன் பேட்டி" என்று இருந்தது.
இதன் மூலம் 2019ம் ஆண்டு வெளியான செய்தியை தற்போது வெளியானது போலவும், மத்திய அரசின் ஐ.சி.எஃப்-க்கு மாநில முதல்வர் உத்தரவிட்டது போன்றும் தவறான செய்தியை பலரும் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.
அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive
முடிவு:
2019ம் ஆண்டு வெளியான ஐ.சி.எஃப்-ல் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது மு.க.ஸ்டாலின் வெளியிட்டது போன்று சமூக ஊடகங்களில் பலரும் தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:ஐ.சி.எஃப் பணிகளுக்கு வட மாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False