FACT CHECK: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்திய நர்ஸ் மரணம் என்று பரவும் தவறான நியூஸ் கார்டுகள்!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் உயிரிழந்தார் என்று சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காசா தாக்குதல்: இந்திய பெண் உள்பட 31 பேர் பலி. காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் டெம்பிள் டவர் என்றிழைக்கப்படும் 13 மாடிக் குடியிருப்பு இடிந்து நொறுங்கியதில் கேரள செவிலியர் உள்பட 31 பேர் பலி; உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு மத்திய அரசு அரசு உதவிக்கரம்! காசாவில் உள்ள போராளிக் குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் வான் வழி ராக்கெட் தாக்குதல்!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Malainadan Azad என்பவர் 2021 மே 12ம் தேதி பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அதே போல், ABP Nadu என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டில், “இஸ்ரேல் தாக்குதலில், கணவருடன் Video Call பேசியவாரு கேரளா பெண் பலி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. கேரளா இடுக்கியைச் சேர்ந்த செவிலியரான சௌமியா இந்த தாக்குதலில் பலியானார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இவற்றைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: dinamani.com I Archive

தினமணி வெளியிட்டிருந்த செய்தியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் கேரள பெண் செவிலியர் மரணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியை தினமணி மே 12, 2021 அன்று வெளியிட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலில் பலரும் பலியாகி வருகின்றனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த போராளிகள் குழுவான ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் பணியாற்றி வந்த இந்திய செவிலியர் சௌமியா சந்தோஷ் பலியானர் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்திய நர்ஸ் பலியானார் என்று பலரும் பகிரவே இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் 130க்கும் மேற்பட்ட சிறிய ரக ஏவுகணைகளை செலுத்தித் தாக்குதல் நடத்தினர். இவற்றில் 90 சதவிகித ஏவுகணைகள் வழியிலேயே ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டதாகவும் சில ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவில் உள்ளிட்ட நகரங்கள் மீது விழுந்ததாகவும் செய்திகள் கிடைத்தன.

இதில் அஷ்கிலான் என்ற நகரில் முதிய பெண்மணி வருவருக்கு பராமரிப்பு சேவை வழங்கி வந்த செவிலியர் சௌமியா உயிரிழந்தார். அந்த மூதாட்டியும் இந்த தாக்குதலில் உயிரிழந்தார் என்று செய்திகள் கிடைத்தன. அஷ்கிலான் என்பது காசாவுக்கு அருகில் அமைந்துள்ள இஸ்ரேல் நகரம் என்பது தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: maalaimalar.com I Archive 1 I vikatan.com I Archive 2 I timesofindia I Archive 3

தொடர்ந்து தேடிய போது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உயிரிழந்ததற்கு ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா கண்டனம் தெரிவித்தது என்ற செய்தி கிடைத்தது. 

அசல் பதிவைக் காண: indiatvnews.com I Archive

மேலும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் Ron Malka தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த செளமியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படி எல்லா செய்திகளும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நகரத்தின் மீது நடத்திய தாக்குதலில் இந்திய செவிலியர் உயிரிழந்தார் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. பிறகு எப்படி இந்த நியூஸ் கார்டுகள் பரவுகின்றன என ஆய்வு செய்தோம்.

Archive

சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், “இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 30 வயதான செவிலியர் சவுமியா உள்பட 31 பேர் பலி” என்று இருந்தது. இதில் சரியாக இருக்கிறதே, அந்த நியூஸ் கார்டு போலியாக தயாரிக்கப்பட்டதாக இருக்குமோ என்று பார்த்தோம். ஆனால் அது உண்மையானது போலவே இருந்தது.

எனவே, சன் நியூஸ் வெளியிட்ட பதிவின் திருத்தம் செய்யப்பட்ட தகவலை ஆய்வு செய்தோம். அப்போது முதலில் மே 12ம் தேதி காலை 9.11க்கு “காசா தாக்குதலில் இந்திய பெண் பலி” என்று முதலில் பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. பிறகு உண்மை தெரிந்த பிறகு பிற்பகல் 12.11க்கு “இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இந்திய பெண் பலி” என்று மாற்றியிருப்பது தெரிந்தது. அதற்குள்ள அந்த நியூஸ் கார்டை டவுன்லோட் செய்தவர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ABP Nadu என்ற ஃபேஸ்புக் பதில், “இஸ்ரேல் தாக்குதலில் கணவருடன் வீடியோ கால் பேசியவாரு கேரளா பெண் பலி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பதிவில் ஒரு செய்தி லிங்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் பார்த்தபோது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்திய செவிலியர் பலியானர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், நியூஸ் கார்டில் மட்டும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிந்தது.

இஸ்ரேல் தாக்குதல் என்றால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர்களாக அர்த்தம் கொண்டார்களா என்று தெரியவில்லை. இஸ்ரேல் தாக்குதல் என்றால் அது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்றே அர்த்தம் கொள்ள முடிகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்ற வகையில் பலரும் அந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. 

அசல் பதிவைக் காண: abplive.com I Archive

சன் நியூஸ் தவறாக வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்திய செவிலியர் கொல்லப்பட்டார் என்று தவறான தகவலை பகிர்ந்து வருவது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்திய செவிலியர் மரணம் அடைந்தார் என்று பரவும் நியூஸ் கார்டு தவறானது என்பதை  ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்திய நர்ஸ் மரணம் என்று பரவும் தவறான நியூஸ் கார்டுகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False