அமித்ஷா காலில் விழுந்த கனிமொழி, மு.க.ஸ்டாலின்? – போலி புகைப்படத்தால் சர்ச்சை!

அரசியல் சமூக ஊடகம்

இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்ய மாட்டோம் என்று அமித்ஷா காலில் கனிமொழி, மு.க.ஸ்டாலின் விழுந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Stalin 2.png
Facebook LinkArchived Link

சோஃபாவில் அமர்ந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விழுவது போலவும் அவருக்கு அருகில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழ தயாரான நிலையில் இருப்பது போலவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “எங்களை விட்டுவிடுங்கள். இந்தி போராட்டம் எல்லாம் செய்யமாட்டோம்” என்று அவர்கள் கூறியதுபோல குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Sunil Kavaskar என்பவர் 2019 செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமித்ஷாவுக்கு பயந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திரும்பப்பெற்றதாக பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். 

இந்தி திணிப்பு இருக்காது என்று மத்திய அரசு உறுதி மொழி அளித்துள்ளது, இதனால் போராட்டம் நடத்த வேண்டாம் என்று தமிழக ஆளுநர் கேட்டுக்கொண்டதாலும் இந்தி பற்றி தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாலும் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. தங்கள் போராட்ட அறிவிப்புக்கு அமித்ஷா பயந்துவிட்டார் என்று தி.மு.க-வினர் கூறிவருகின்றனர்.

Stalin 3.png
BBCArchived Link 1
nakkheeran.inArchived Link 2
Facebook LinkArchived Link 3

சென்னை மாமல்லபுரத்தில் மோடி, சீன அதிபர் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ள சூழலில், தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துகொண்டிருப்பது சரியாக இருக்காது என்பதால் ஸ்டாலினை அழைத்து சமாதானம் செய்தார் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ, உறுதியான தகவலும் இல்லை. இது அவரவர் கருத்து என்பதால் இந்த விஷயத்துக்குள் செல்லவில்லை.

ஆனால், புகைப்படம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படத்தைப் பார்க்கும்போதே இது மார்ஃபிங் செய்யப்பட்டது என்று தெரிகிறது. தங்களின் வன்மத்தைக் காட்டுவதற்காக இதுபோன்று படங்களைத் தயார் செய்து உண்மையானது போல சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். பலரும் இந்த புகைப்படங்கள் தங்கள் பக்கத்தில் வெளியிட்டு, ஷேர் செய்து வரவே, இதற்கு பதிலடியாக தி.மு.க-வினரும் பதிவிட்டு வருவது தெரிந்தது. எனவே, இந்த படத்தின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அமித்ஷாவும் நிதின் கட்கரியும் சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. இந்த புகைப்படத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்பட பல ஊடகங்கள் அவ்வப்போது கோப்புப் படமாக பயன்படுத்தி வருவது தெரிந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து, அதில் கனிமொழி, மு.க.ஸ்டாலின் படத்தை வைத்துள்ளது தெரிந்தது. 

Search Link 1Times Of IndiaArchived Link 1
Search Link 2The HinduArchived Link 2

கனிமொழி, ஸ்டாலின் படம் எங்கிருந்து எடுத்துள்ளார்கள் என்று தேடினோம். 2015ம் ஆண்டு கனிமொழியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்துக்குச் சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட படம் என்று இந்து செய்தி வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. இந்த படத்தை எடுத்து, இரண்டு பேரையும் தனித்தனியாக எடுத்து, அமித்ஷா – நிதின் கட்கரி படத்தில் வைத்து ஒட்டு வேலை செய்தது தெரிந்தது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அமித்ஷா காலில் கனிமொழி விழுந்தது போன்று வெளியிடப்பட்ட புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அமித்ஷா காலில் விழுந்த கனிமொழி, மு.க.ஸ்டாலின்? – போலி புகைப்படத்தால் சர்ச்சை!

Fact Check By: Chendur Pandian 

Result: False