டெலிபிராம்டர் வைத்துப் பேசும் மோடி என்று அண்ணாமலை விமர்சனம் செய்ததாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

அண்ணாமலை பேசிய வீடியோவின் ஒரு சிறு பகுதி மட்டும் ஃபேஸ்புக், எக்ஸ் போஸ்டில் பகிரப்பட்டுள்ளது. அதில், "இது வந்துங்க ரூமை பூட்டிட்டு. ஃபிரண்ட்ல ஒரு பிராம்டரை வச்சிக்கிட்டு, அவரு ட்விட்டர்ல பேசுற வீடியோ கிடையாது. பின்னாடி ஒரு பிராம்டர் வச்சிருப்பாங்க. அதை பார்த்து டப் டப் டப்னு படிப்பாரு. அதை ஐடி விங் எடுப்பான். டப்னு கட் பண்ணி போட்டுருவான்" என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டெலிபிராம்டர் பார்த்து தடுமாறி பேசும் வீடியோ வருகிறது.

நிலைத் தகவலில், "பதவி பறிக்கப்படுவது உறுதி என்று தெரிந்ததும் மோடியவே நக்கல் பண்ண தொடங்கிட்டான் ஆடு 😂 நரேந்திர மோடி Teleprompter வைத்து படிப்பதை குத்திக்காட்டும் ஆடு 🥱" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெலிபிராம்ட் பார்த்து பேசும் மோடி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அந்த வீடியோவில் நரேந்திர மோடியை குறிப்பிட்டு அண்ணாமலை பேசியது போல் இல்லை. யாரைப் பற்றி அவ்வாறு சொல்கிறார் என்று தெரியாத அளவுக்கு மிக சிறிய பகுதி மட்டும் வெட்டி பதிவிடப்பட்டிருந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவில் ஏபிபி நாடு என்ற இணைய ஊடகத்தின் லோகோ இருந்தது. எனவே, அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை தேடி எடுத்தோம். 2024 ஜூலை 31ம் தேதி இந்த வீடியோவை ரீல்ஸ் ஆக அந்த ஊடகம் பதிவிட்டிருந்தது. அதில், "ஸ்டாலினுக்கு பயம்... பேசத் தெரியாது அண்ணாமலை பகீர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

அந்த ரீல்ஸ் வீடியோவை பார்த்தோம். ‘’அங்க போனார்னா வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் இந்தியாவில் இருக்கிற எல்லாருக்கும் தெரிந்துவிடும். இது வந்துங்க ரூமை பூட்டிட்டு. ஃபிரண்ட்ல ஒரு பிராம்டரை வச்சிக்கிட்டு, அவரு ட்விட்டர்ல பேசுற வீடியோ கிடையாது. பின்னாடி ஒரு பிராம்டர் வச்சிருப்பாங்க. அதை பார்த்து டப் டப் டப்னு படிப்பாரு. அதை ஐடி விங் எடுப்பான். டப்னு கட் பண்ணி போட்டுருவான். பயம் காரணமாகத்தான் நிதிஆயோக் கூட்டத்திற்கு ஸ்டாலின் செல்லவில்லையே தவிர தமிழ்நாடு என்ற பெயரை பட்ஜெட்டில் பயன்படுத்தவில்ல என்பதற்காக போகவில்லை என்பதெல்லாம் கட்டுக்கதை" என்று அண்ணாமலை பேசினார்.

இதேபோன்று, தினமலர் இந்த பேச்சின் வீடியோவை வெளியிட்டிருந்தது. அதில், ஸ்டாலின் ஏன் நிதிஆயோக் போகவில்லை என்று அண்ணாமலை தன்னுடைய கட்சியினரிடம் பேசுகிறார். அந்த வீடியோவின் 1.55வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி வருகிறது. அதில் ஸ்டாலின் அத்தனை முதலமைச்சர்கள் முன்னிலையில் பேச முடியாது என்பதால் செல்லவில்லை என்பதாகப் பேசுகிறார்.

இதன் மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, டெலிபிராம்ட் பயன்படுத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கவில்லை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே விமர்சித்தார் என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நிதிஆயோக் கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் போகாதது பற்றி அண்ணாமலை விமர்சித்து பேசிய வீடியோவில் தங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் எடுத்து நரேந்திர மோடியை விமர்சித்த அண்ணாமலை என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘டெலிபிராம்டர் வைத்துப் பேசும் நரேந்திர மோடி’ என்று நக்கல் செய்தாரா அண்ணாமலை?

Fact Check By: Chendur Pandian

Result: False