இஸ்ரேல் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal False சர்வதேசம் | International

இஸ்ரேலின் ஹைஃபா மின் நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “🇮🇷ஈரான், ஹைஃபா மின் நிலையத்தை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தகர்த்துள்ளது.🚀🔥🇮🇱

828 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம் அழிக்கப்பட்டதால், இஸ்ரேலின் பாதிப் பகுதி இருளில் மூழ்கியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் – ஈரான் போரின் பாதிப்பு என்று பல பழைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அப்படி சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதல் என்று குறிப்பிட்டு பகிரப்பட்ட வீடியோவை தற்போது மீண்டும் ஈரான் நடத்திய தாக்குதல் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2017ம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. பலரும் இந்த சம்பவம் சீனாவில் நடந்தது என்றும் சிங்கப்பூரில் நடந்தது என்றும் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: military.com I Archive I mirror.co.uk I Archive

தொடர்ந்து தேடிய போது, இந்த சம்பவம் சீனாவில் உள்ள ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தினுடையது என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் 2015ம் ஆண்டு சீனாவின் செஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நடந்தது என்று குறிப்பிட்டு வெளியான வீடியோக்கள், செய்திகள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் சீனாவின் ரசாயன ஆலை வெடிவிபத்தின் வீடியோவை இஸ்ரேலின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் என்று தவறாக பகிரப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்ரேல் மின்நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக பரவும் வீடியோ 2015ம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த தொழிற்சாலை விபத்தின் போது பதிவு செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: இஸ்ரேல் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply