
கேரளாவில் பாகிஸ்தான் கொடியுடன் வந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்ற தொண்டர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முஸ்லிம் லீக் கட்சிக் கொடியுடன் ஊர்வலமாக சென்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், நிலைத் தகவலில், “கேரளா வயநாட்டில் ராகுல் வருகைக்கு பாகிஸ்தான் கொடியை ஏந்தி வரவேற்பு இந்துக்களே சிந்தியுங்கள் என்று நான் முட்டாளாக சொல்ல போவதில்லை நான் மதவாதியும் அல்ல நான் இந்தியனாக சொல்கிறேன் சிந்தித்து வாக்களியுங்கள் தமிழ்நாட்டில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தல் வந்துவிட்டாலே முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை பாகிஸ்தான் கொடி என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவது தொடர்கிறது. தங்களுக்கு மட்டுமே தேசபக்தி சொந்தம் என்பது போலவும் மற்றவர்கள் எல்லாம் எப்போதும் பாகிஸ்தான் கொடியுடனே இருப்பது போலவும் பலரும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகம், கர்நாடகா, கேரள போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல் நேரத்திலும் கூட இந்தியத் தேசிய முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை பாகிஸ்தான் கொடி என்று கூறி வதந்தி பரப்பினர். அது தவறான தகவல் என்று அப்போதும் கூட ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போதும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது பாகிஸ்தான் கொடியா அல்லது இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் கொடியா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் கட்சியாகும். பச்சை நிற கொடியின் ஒரு ஓரத்தில் வெள்ளை நிறத்தில் பிறை நட்சத்திரம் இருக்கும். அக்கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அக்கட்சியின் கொடியை எடுத்தோம். ஆனால், பாகிஸ்தான் கொடியோ வித்தியாசமானது. வெள்ளை பட்டையுடன் கூடிய பச்சை நிற கொடி பாகிஸ்தானுடையது. அதில் மிகப் பெரிதாக மையத்தில் வெள்ளை நிறத்தில் பிறை மற்றும் நட்சத்திரம் சின்னம் இருக்கும்.

பாகிஸ்தான் கொடியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சியின் கொடியை ஒப்பிடும் போதும் இரண்டும் வேறு வேறு என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஆனால் உண்மை என்ன என்று அறிந்தோ அறியாமலோ முஸ்லிம் லீக் கட்சியின் கொடியை பாகிஸ்தான் கொடி என்று தவறாக வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சரி இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2019ம் ஆண்டு இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது தெரிந்தது. பழைய வீடியோவை எடுத்துவந்து இப்போது பாகிஸ்தான் கொடியுடன் ஊர்வலம் நடந்தது போன்று வதந்தி பரப்பியிருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வயநாடு தொகுதியில் பாகிஸ்தான் கொடியுடன் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை பாகிஸ்தான் கொடி என்று விஷமத்தனமாக பரப்பி வருவதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கேரளாவில் ராகுல் காந்திக்கு பாகிஸ்தான் கொடியேந்தி வரவேற்பு அளிக்கப்பட்டதா?
Written By: Chendur PandianResult: False
