
தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழக அரசின் கடனை அடைக்க மாதம் ரூ.1000 அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆட்சிக்கு வந்தால். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் நினைத்தால் மாதம் 1000 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும் அதைவைத்து தமிழ்நாட்டு கடன் அடைக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் மக்களுக்கு பல்வேறு இலவசங்களை போட்டிப் போட்டு அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடமிருந்து மாதம் ரூ.1000ம் வசூலித்து தமிழ்நாடு அரசின் கடனை அடைக்க உள்ளதாக அறிவித்தது போன்று ஒரு நியூஸ் கார்டை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
பார்க்க சன் டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு போலவே உள்ளது. ஆனால், மக்களிடம் பணம் வசூலிக்கும் திட்டத்தை அரசியல் தலைவர்கள் அறிவிக்க வாய்ப்பே இல்லை, அதுவும் எதிர்க்கட்சிகள் போட்டுப் போட்டு இலவசங்களை அறிவித்து வரும் நிலையில் இப்படி அறிவிப்பு வெளியிட வாய்ப்பில்லை என்பதால் இது போலியான நியூஸ் கார்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
இப்படி ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. இந்த நியூஸ் கார்டை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இதே போன்ற ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் 2026 மார்ச் 4ம் தேதி வெளியிட்டிருந்தது தெரிந்தது. திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் விடுத்திருந்த எச்சரிக்கை தொடர்பான செய்தி அதிலிருந்தது. அந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவானது.

இதை உறுதிசெய்துகொள்ள சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புவோர் தமிழக அரசின் கடனை அடைக்க மாதம் ரூ.1000ம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு என பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


