
வாக்கு எந்திரத்தில் மோசடி செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் இரட்டை இலைக்கு வாக்களித்துப் பரிசோதித்து பார்த்த பிறகு தி.மு.க-வுக்கு வாக்களிக்க மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வாக்கு எந்திரத்தில் மோசடி செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் இரட்டை இலைக்கு வாக்களித்து சத்தம் வருகிறதா என்று சோதித்து பார்த்த பின் திமுவிற்கு வாக்களிக்கவும் மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை Maya Kannan என்பவர் 2021 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
ஒன்றிரண்டு பேர் இதே நியூஸ் கார்டு தகவலை மாற்றி, எடப்பாடி பழனிசாமி கூறியதாக பதிவிட்டு வருவதையும் காண முடிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஏப்ரல் 5, 2021 அன்று Ashok Kumar Dmk Kovai என்பவர் வெளியிட்டிருந்த பாலிமர் டிவி நியூஸ் கார்டில், “வாக்கு எந்திரத்தில் மோசடி செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் உதயசூரியனுக்கு வாக்களித்து சத்தம் வருகிறதா என்று சோதித்து பார்த்த பின் அதிமுகவிற்கு வாக்களிக்கவும். மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்” இருந்தது. ஆனால், ஒன்று இரண்டு பேர்தான் இதை ஷேர் செய்திருந்தனர்.
உண்மை அறிவோம்:
வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் பல சந்தேகங்கள் எழுப்பி வரும் நிலையில், இரட்டை இலைக்கு வாக்களித்து பரிசோதனை செய்யுங்கள் என்று இப்படி ஒரு அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட வாய்ப்பே இல்லை. ஆனாலும், இதை ஏராளமானவர்கள் ஷேர் செய்து வருவது இதன் விஷமத்தனத்தை உணர்த்தியது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் பாலிமர் தொலைக்காட்சியில் இப்படி ஒரு நியூஸ் கார்டு வெளியானதா என்று பார்த்தோம். ஆனால் இந்த நியூஸ் கார்டில் குறிப்பிட்டது போன்று 2021 மார்ச் 27ம் தேதியிலோ அதன் பிறகோ இப்படி ஒரு நியூஸ்கார்டை பாலிமர் டிவி வெளியிடவில்லை என்பது தெரிந்தது. பாலிமர் தொலைக்காட்சியைத் தொடர்புகொண்டு கேட்ட போது, அவர்களும் இது போலியானது, என்று உறுதி செய்தனர்.
தொடர்ந்து தி.மு.க ஐ.டி-விங் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில், மு.க.ஸ்டாலின் பெயரில் சிலர் இப்படி தவறாக வதந்தி பரப்பி வருகின்றனர் என்று பதிவிட்டிருந்தது தெரிந்தது. அதில், “பாஜகவுடன் கூட்டு சேர்ந்த அதிமுக-வின் கோரமுகம்! திராவிட இயக்கத்தால் கல்வி அறிவு பெற்ற தமிழக மக்களிடம் இவர்களது போலி செய்திகள் எடுபடாது என்பதை அறிந்தும் திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் பெயரில் போலி செய்திகளை பரப்பி வருகின்றனர்” என்று திமுக ஐடி விங் பெயரில் பரவி வரும் வதந்தியை பகிர்ந்திருந்தனர்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் மூலம் தி.மு.க கூட்டணி சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு முன்பு இரட்டை இலை சின்னத்தை அழுத்தும்படி ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் தவறானது, விஷமத்தனமானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க-வுக்கு வாக்களிப்பதற்கு முன்பு இரட்டை இலைச் சின்னத்தை அழுத்தி வாக்குப் பதிவு இயந்திரத்தை சரி பார்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வாக்கு பதிவு இயந்திரத்தை சரி பார்க்க முதலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
