
அம்மா உணவத்தில் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மு.க.ஸ்டாலின் அம்மா உணவகத்தில் உணவு உட்கொள்வது வேறு ஒருவர் போட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். ஸ்டாலின் தலைக்கு மேல் அம்மா உணவகம் என்று போர்டு உள்ளது. அந்த ஸ்கிரீன் ஷாட்டில், “பசி வந்தால் பத்தும் பறந்து போகும் பகையும் மறந்து போகும்” என்று உள்ளது.
இந்த பதிவை வெளியிட்டவர் தன்னுடைய நிலைத் தகவலில், “கடைசியில் உன் பசிக்கு சோறு போட்டது எங்க அம்மாதான் டி. டேய்.. அஞ்சு ரூபா தாண்டா.. அதையாவது குடுத்துட்டு தின்னியா.. இல்ல அங்கயும் உன் வேலைய காட்டிடயா” என்று கேட்டுள்ளார்.
இந்த பதிவை அபராஜிதா அபி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மார்ச் 22 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அம்மா உணவகம் அ.தி.மு.க-வினருக்கு ஆரம்பிக்கப்பட்டது போலவும், அதில் மு.க.ஸ்டாலின் சென்று சாப்பிட்டுவிட்டது போலவும் பதிவு உள்ளது. இந்த அரசியலுக்குள் நாம் செல்லவில்லை. இந்த புகைப்படம் உண்மையானதா, எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த ஒரு பதிவும் கிடைக்கவில்லை. வேறு வேறு புகைப்பட தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். tineye.com என்ற தளத்தில் தேடியபோது இந்த புகைப்படம் தொடர்பான தகவல் நமக்கு கிடைத்தது.
அசல் பதிவைக் காண: oneindia.com I Archive
2015ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட போது கோவையில் ஒரு கடையில் தோசை சாப்பிட்ட போது எடுத்த படம் என்று “அம்மா உணவகம்” போர்டு இல்லாத படத்தை தமிழ் ஒன் இந்தியா பகிர்ந்திருந்தது. அந்த செய்தியில், “காரமடை ரோட்டில் உள்ள ஒரு ரோட்டோர கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது டீ இல்லாததால் கடையில் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டு விட்டு கடைக்காரரான மலர்க்கொடி கண்ணன் என்பவருக்கு 100 ரூபாய் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது 2015ம் ஆண்டிலேயே அம்மா உணவகத்தில் சாப்பிடுவது போல புகைப்படத்தை போட்டோஷாப் செய்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது பற்றி ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியாகி இருப்பதும் நமக்கு கிடைத்தது.
அந்த செய்தியில், “இந்த உண்மை புரியாமல், ‘ஸ்டாலின் அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறார். பார்த்தீர்களா.. திமுக – அதிமுக என்று மோதிக் கொண்டாலும், அவர்களுக்கு உள்ளுக்குள்ள ஒரு தொடர்பு இருக்கிறது’ என்கிற பாணியில் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர் சிலர். சில அரசியல் பிரபலங்களே கூட இதை நம்பிவிட்டதுதான் வேடிக்கை.
அசல் பதிவைக் காண: oneindia.com I Archive
அட, அப்படியே ஸ்டாலின் அம்மா உணவகத்தில் சாப்பிடுவது அவ்வளவு பெரிய தப்பா? அது ஒன்றும் அதிமுகவுக்கான உணவகம் இல்லையே.. மக்கள் அனைவருக்கும் பொதுவானதுதானே… ஒரு சட்டமன்ற உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக ஒரு அம்மா உணவகம் இயங்குவதை ஆய்வு செய்யும் அதிகாரம் ஸ்டாலினுக்கு உண்டல்லவா!” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் 2015ம் ஆண்டு கோவையில் ஒரு உணவகத்தில் மு.க.ஸ்டாலின் சாப்பிட்ட படத்தை எடுத்துவந்து சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டார் என்று வதந்தி பரப்பி வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பசி காரணமாக அம்மா உணவகம் சென்று சாப்பிட்ட ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டதாக பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered
