ஜப்பானில் உள்ள மவுண்ட் ஃபூஜியின் வீடியோவை சீனாவின் திபெத்தில் உள்ள கைலாச மலை என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட மலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "இப்படி ஒரு கைலாஷ் தரிசன காட்சி காணவே முடியாது..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ராஜலெட்சுமி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்துக்கள், பௌத்தர்களின் புனிதத் தலமாகக் கைலாச மலை உள்ளது. சீனாவின் திபெத்தில் உள்ள அந்த மலையை வைத்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள தான்சானிய நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலையைக் கைலாச மலை என்று சிலர் வதந்தி பரப்பினர். அது பற்றி முன்பு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, எரிமலை போன்று உள்ள மலை ஒன்றின் வீடியோவை கைலாச மலை என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். கைலாச மலைக்கும், இதற்கும் தொடர்பே இல்லாததால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். கைலாச மலை என்பது மலை சிகரமாக, உச்சி பகுதி கூரான வடிவத்தில் இருக்கும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள மலையில் பள்ளம் இருக்கிறது. எனவே, இது எரிமலை என்பது தெளிவாகத் தெரிகிறது.

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது ஜப்பான் நாட்டில் உள்ள மவுண்ட் ஃபூஜி என்று சில வீடியோக்கள் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோவை 2017ம் ஆண்டு Airportag என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்தது. அதில் மவுண்ட் ஃபூஜி என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கு முன்பாக sciencealert என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தது. அதிலும் ஜப்பானின் மவுண்ட் ஃபூஜி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

மேலும் பல ஆண்டுகளாகவே மவுண்ட் ஃபூஜியின் ஜிஃப் (GIF) என்று குறிப்பிட்டு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதையும் காண முடிந்தது. விமானத்தில் இருந்து மவுண்ட் ஃபூஜியின் தோற்றம் என்று பலரும் பல வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்திருப்பதையும் காண முடிந்தது. அந்த யூடியூப் வீடியோக்களும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள மலையும் ஒத்துப்போவதை காண முடிந்தது.

மவுண்ட் ஃபூஜியின் படங்களை கூகுளில் தேடிப் பார்த்தோம். அவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போலவே இருந்தது. இதன் மூலம் மவுண்ட் ஃபூஜியின் வீடியோவை கைலாஷ் மலை என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜப்பானில் உள்ள மலையை, கைலாச மலை என்று தவறாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மவுண்ட் புஜி புகைப்படத்தை கைலாச மலை என்று தவறாக பரப்பும் நெட்டிசன்கள்!

Fact Check By: Chendur Pandian

Result: False