
தி.மு.க எம்.எல்.ஏ-வும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்ட ட்வீடின் ஸ்கிரீன்ஷாட் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை. இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது” என்று இருந்தது.
இந்த பதிவை Rana Prathap Sing என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 22ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில், “எத்தினையோ உபிகள் இருந்தாலும் மடிச்சு போட்டு சுவைப்பதில் இவனை அடிச்சுக்க ஆளே இல்லையாம் அறிவாலயத்திலே பேசிகிட்டாங்க” என்று குறிப்பிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
செய்தியாளர் செந்தில்வேல் கூறியது என்று பல போலியான தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. செந்தில்வேல் பெயரில் போலியாக ட்விட்டர் பக்கத்தை உருவாக்கி, அவர் வெளியிட்டது போன்று போலியான ட்வீட் பதிவுகள் வெளியிட்டு, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இலங்கையைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று செந்தில்வேல் கூறியதாக சில வாரங்களுக்கு முன்புதான் போலியான ட்வீட் வைரலாக பகிர்ந்தது. தற்போது, தி.மு.க-வின் உதயநிதி ஸ்டாலினை, பெரியாராகப் பார்க்கிறேன் என்று செந்தில்வேல் கூறியதாக ஒரு ட்வீட் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் அக்கவுண்ட் உண்மையில் செந்தில் வேலுடையதா என்று பார்த்தோம். இந்த ட்வீட்டில் உள்ள ஐடியை சற்று பெரிதாக்கிப் பார்த்தபோது, செந்தில் (Senthil) என்ற ஆங்கில பெயரில் கூடுதலாக ஒரு L சேர்க்கப்பட்டிருப்பது தெரிந்தது. “@Senthillvel79” என்பது செந்தில்வேல் பெயரில் செயல்படும் போலியான ட்விட்டர் பக்கம். “Sarcasm” என்று குறிப்பிட்டே அந்த ட்விட்டர் அக்கவுண்ட் செயல்பாட்டில் உள்ளது. இது பற்றி ஏற்கனவே நாம் வெளியிட்ட கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். செந்தில்வேலின் உண்மையான ட்விட்டர் பக்கம் @Senthilvel79 என்பதாகும்.
இந்த போலி ட்விட்டர் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உள்ளதா என்று பார்த்தோம். மே 20, 2022 அன்று அந்த பதிவு வெளியாகி இருப்பது தெரிந்தது. செந்தில்வேல் பெயரில் செயல்படும் போலியான ட்விட்டர் பக்கம் விஷமத்தனமாக வெளியிட்ட ட்வீட்டை, செய்தியாளர் செந்தில்தான் வெளியிட்டார் என்று நினைத்து பலரும் பகிர்ந்து வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது என்று செய்தியாளர் செந்தில் கூறியதாக பரவும் ட்வீட், உண்மையில் அவர் வெளியிட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பெரியாரை உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று செந்தில்வேல் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
