FACT CHECK: பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் உருவாக்கியதாக பரவும் வதந்தி!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சாலையோர வியாபாரிகள் வைத்திருக்கும் தள்ளுவண்டிகளைக் கொண்டு காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பலரும் காய்கறிகளை வாங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “n Bangalore the farmers have started their own super market . They are themselves bringing their fruits , Vegetables and other products directly into this super market from where it goes straight to the customers for their use. Farmers and Customers are both very Happy now .

பெங்களூரில் விவசாயிகள் தனியாக காய்கறி சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்திருக்கிறார்கள். மக்களுக்கு நேரிடையாக விற்பனை செய்கிறார்கள். விவசாயிகளுக்கும் மக்களுக்கும் லாபம்தான். ஏன் விவசாயிகள் இதே போல சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தொடங்கக்கூடாது?? விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் எதையுமே சாதிக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Adhirasam என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 டிசம்பர் 21ம் தேதி பகிர்ந்துள்ளது. இதைப் போல பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டன. தற்போதும் கூட பல உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட்டை தொடங்கியுள்ளனர் என்றும் இது போன்று தமிழகத்திலும் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட்களை தொடங்க வேண்டும் என்றும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் உருவாக்கியது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பெங்களூரு, விவசாயிகள் சூப்பர் மார்க்கெட் என முக்கிய கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடியபோது, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ உள்ளிட்ட பல ஃபேக்ட் செக் ஊடகங்களில் இது தொடர்பான செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. ஆனால், பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் தொடங்கினார்கள் என்று எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தொடர்ந்து தேடியபோது மற்ற மொழிகளில் இந்த படத்துடன் வேறு சில படங்களையும் சேர்த்துப் பகிர்ந்து வந்திருப்பது தெரிந்தது. அந்த படங்களில் Humus என்று சூப்பர் மார்க்கெட்டின் பெயரும் இருந்தது. 

Humus, பெங்களூரு என்று டைப் செய்து தேடியபோது, அந்த சூப்பர் மார்க்கெட்டின் இணையதள பக்கம் நமக்கு கிடைத்தது. அதில் இது விவசாயிகள் இணைந்து நடத்தும் சூப்பர் மார்க்கெட் என்று குறிப்பிடவில்லை. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று தள்ளுவண்டிகளைக் கொண்டு கடை உருவாக்கப்பட்ட படமும் கிடைத்தது. எனவே, Humus சூப்பர் மார்க்கெட்டைத்தான் விவசாயிகள் தொடங்கிய மார்க்கெட் என்று கூறுகிறார்கள் என்று தெரிந்தது.

இந்த சூப்பர் மார்க்கெட் பெங்களூருவின் முதல் நியாய விலை கடை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை நேரடியாக வாங்கி விற்பனை செய்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அசல் பதிவைக் காண: humus.co.in I Archive

மேலும், நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் Humus நிறுவனர் மஞ்சுநாத்தை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, இது விவசாயிகள் இணைந்து நடத்தும் சூப்பர் மார்க்கெட் என்ற தகவல் தவறானது என்று கூறினார்.

மேலும், “பெங்களூருவைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள எங்கள் ஸ்டோரில் வைத்து குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்கிறோம். நானும் என்னுடைய மனைவியும் இணைந்து இந்த சூப்பர் மார்க்கெட்டை தொடங்கியுள்ளோம்” என்றார்.

இதன் மூலம் பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட்டை தொடங்கியுள்ளார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

பெங்களூவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் திறந்துள்ளார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் உருவாக்கியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False