உத்தரப்பிரதேச கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடு இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் மஹாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் தொடர்புடையவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive

ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களை பார்க்கும் போது சிறுபான்மையினர் போல உள்ளனர். நிலைத் தகவலில், “உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச், மஹராஜ்கஞ்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான ரம் கோபல் மிஷ்ர கொலை எதிரொலியாக சட்டவிரோத வீடுகள், கடைகளை இடித்து தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகத்தினர்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, “*பாலஸ்தீனமல்ல இது பஹ்ரைச்* உ.பி.மாநிலம்‌ பஹ்ரைச்சில் தசரா ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் முன் வேண்டுமென்றே ஒலிக்கப்பட்ட மத வன்மத்தை தூண்டிய பாடலால் ஏற்ப்பட்ட வன்முறையை அடுத்து எழுந்த கலவரத்தில் கைது செய்யப்ப்பட்ட முஸ்லீம் பகுதியை சார்ந்த வீடுகளை உ.பி அரசாங்கம் புல்டோசரை வைத்து இடித்துள்ளது” என்று வேறு சிலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் மஹாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் நவராத்திரி விழாவைத் தொடர்ந்து நடந்த துர்கா சிலை ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மோதல் கலவரம் ஆனது.

கலவரத்தில் தொடர்புடைய 23 பேரின் வீடுகளை இடிக்க பஹ்ரைச் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. இது தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. இதனால் தற்காலிகமாக இடிப்பு நடவடிக்கை முடங்கியுள்ளது. இந்த சூழலில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் இதை பெரிய வெற்றியாகக் கருதி பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் அப்பாவிகளின் வீடுகள் இடிக்கப்பட்டதாக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமீப நாட்களாக பலரும் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்திருந்தனர். இவற்றுக்கு இடையே மூன்று வாரங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டது என்று ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ நமக்குக் கிடைத்தது. அதை பார்த்த போது, 2024 செப்டம்பர் 26ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. தசரா விழா 2024 அக்டோபர் 12ம் தேதி நடந்தது. அதற்கு அடுத்த நாள் துர்கா சிலை ஊர்வலம் நடந்த போது கலவரம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அப்படி இருக்க இந்த வீடியோ செப்டம்பர் 26ம் தேதி பதிவு செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com 

தொடர்ந்து தேடிய போது யூடியூபில் பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோவும் செப்டம்பர் 26ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “Wazirganj bajar jila Bahraich” என்று இருந்தது. இந்தி வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில் எழுதியிருப்பது தெரிந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, “வசிர்கஞ்ச் சந்தை பஹ்ரைச் மாவட்டம்” என்று தெரிந்தது. இதன் அடிப்படையில் வஜிர்கஞ்ச், பஹ்ரைச், வீடுகள் இடிப்பு என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது 2024 செப்டம்பர் 25ம் தேதி ஆங்கில ஊடகங்களில் வெளியான வீடுகள் இடிப்பு தொடர்பான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.

அந்த செய்தியில், “பஹ்ரைச் மாவட்டத்தில் சராய் ஜக்னா கிராமத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை உத்தரவு அடிப்படையில் 23 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இந்த 23 கட்டிடங்களும் கிராம பஞ்சாயத்து நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது என்று கண்டறியப்பட்டு, காலி செய்யும் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் காலி செய்யவில்லை என்பதால் கட்டிடம் 25 செப்டம்பர் அன்று இடிக்கப்பட்டது. இதில் 11 கடைகளும், எட்டு வீடுகளும், நான்கு இதர கட்டிடங்களும் அடங்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

மேலும் இது தொடர்பாக கைசர்கஞ்ச் என்ற அந்த பகுதியின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) அலோக் குமாரின் பேட்டியையும் வெளியிட்டிருந்தனர். அவர் கூறுகையில், ” அலகாபாத் லக்னோ கிளை உத்தரவு அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்திருந்த உத்தரவுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஏற்கனவே தனியாக வாழ்விடம் உள்ளது. எனவே, இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான கேள்வி எழவில்லை. 2023ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது” என்று கூறியிருந்தார்.

இடம் இடிக்கப்பட்டது உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் தான். ஆனால் கலவரம் நடந்த மஹாராஜ்கஞ்ச் பகுதியில் இது நடக்கவில்லை. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் பழைய வீடியோவை எடுத்து, தற்போது நடந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் துர்கா சிலை ஊர்வலத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடையவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உத்தரப்பிரதேச கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடு இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False