அதிமுக கோமாளிகளுக்கா உங்கள் ஓட்டு?- பிரேமலதா பேசியதன் உண்மை விவரம்!

அரசியல் சமூக ஊடகம்

‘’அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டுப் போட போகின்றீர்கள்,’’ என பிரேமலதா பேசியதாகக் கூறி, ஒரு வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. பிரேமலதா சார்ந்துள்ள தேமுதிக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில், அவர் பற்றி கூறப்படும் இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

பொதுக்கூட்டத்தில் பிரேமலதா ஆவேசம்!

அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டு போட போகின்றீர்கள்?

Archived Link

இந்த பதிவு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையிலும், 19,000 பேர் வரை ஷேர் செய்துள்ளனர். தினமலர் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆக்ரோஷமாக பேசுகிறார். அதாவது,’’அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் பிறந்த நம் ஊரில், செல்லூர் ராஜூ போன்ற விஞ்ஞானிகளும் உள்ளனர். அணை நீரை தெர்மகோல் போட்டு மூடும் இவர்களை வைத்துக் கொண்டு, ஒரு கோமாளி ஆட்சியை அதிமுக.,வினர் நடத்துகின்றனர். கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை பக்கெட் போட்டு அள்ளி வீசுகின்றனர். வெளிநாடுகளில், இவ்வாறு நடைபெற்றால் அதனை நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாக அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், இங்கே பக்கெட்டில் அள்ளி அப்புறப்படுத்துகின்றனர். இதெல்லாம் சாத்தியமாகுமா? அணை நீரை தெர்மகோல் போட்டு மூட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். நீங்கள் செய்யும் செயலை பார்த்து, தமிழகம் மட்டுமல்ல, உலகமே சிரிக்கிறது. இப்படிப்பட்ட ஊழல் அமைச்சர்களை பற்றி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த கோமாளிகளுக்கா மீண்டும் ஆட்சியை தரப் போகிறீர்கள்,’’ என்று பிரேமலதா பேசியுள்ளார்.

உண்மை அறிவோம்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த். இவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டு, கட்சிப் பணிகளை வழிநடத்தி வருகிறார். பிரேமலதா தனது ஆக்ரோஷமான பேச்சுகளுக்கு பெயர்பெற்றவர் ஆவார். திமுக, அஇஅதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் கடுமையாக, விமர்சித்து வந்த பிரேமலதா, திடீரென, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அஇஅதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்தார். இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன்பேரில், அஇஅதிமுக கூட்டணிக்கு ஓட்டு கேட்டு, பிரேமலதா தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, சில இடங்களில் பேச்சின் இடையே உளறவும் செய்தார். அதுபற்றி நாம் ஏற்கனவே ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளோம்.

இந்நிலையில்தான், அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டுப் போடப் போகிறீர்கள் என பிரேமலதா பேசியதாகக் கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். தினமலர் லோகோவுடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதில், மே தின பொதுக்கூட்டம், திருப்பூர்: தாராபுரம் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு நடுவே, பிரேமலதா பேசுகிறார். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கும்போது, திருப்பூர் தாராபுரத்தில் தேமுதிக சார்பாக நடைபெற்ற மே தின பொதுக்கூட்டம் ஒன்றில்தான் பிரேமலதா இவ்வாறு பேசியுள்ளார் என தெரியவருகிறது. இதனை தினமலர் இணையதளம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், கூகுளில் எதுவும் செய்தி ஆதாரம் கிடைக்கிறதா என தேடிப்பார்த்தோம். அப்போது, இந்த வீடியோவை உண்மைதான் என உறுதி செய்யும் இணைப்பு கிடைத்தது.

இந்த இணைப்பை கிளிக் செய்து பார்த்தபோது, தினமலரில் வெளியான அதே வீடியோ, இங்கே மறுபகிர்வு செய்திருந்தது தெரியவந்தது. இந்த செய்தியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். ஆனால், இந்த செய்தியின்படி, பிரேமலதா பேசியதன் உண்மை வீடியோ தலைப்பு விவரம் கிடைத்தது.

இதையடுத்து, ‘’பாலைவனமாகும் தமிழகம்: பிரேமலதா’’ என கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவின் உண்மை வீடியோ கிடைத்தது. அது மட்டுமல்ல. அது 2 ஆண்டுகள் பழைய வீடியோவாகும்.

Archived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, மேற்கண்ட வீடியோ உண்மைதான். ஆனால், அது கடந்த 2017, மே மாதம் 1ம் தேதி பேசியதாகும். அப்போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது, மிகச் சமீபத்தில்தான். பழைய வீடியோவை எடுத்து, தற்போதைய அரசியல் காரணங்களின் அடிப்படையில் தவறாகச் சித்தரித்துள்ளனர் என உறுதியாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கூறினால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:அதிமுக கோமாளிகளுக்கா உங்கள் ஓட்டு?- பிரேமலதா பேசியதன் உண்மை விவரம்!

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “அதிமுக கோமாளிகளுக்கா உங்கள் ஓட்டு?- பிரேமலதா பேசியதன் உண்மை விவரம்!

  1. இன்னால் கூட்டணிகட்சிகளைப்பற்றி இதற்கு முன்பு பிரேமலதாவின் கருத்து என்ன என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு பகிரப்பட்டது.இது பழயவீடியோ என்று தெரிந்தேதான் பகிர்ந்தோம்.

Comments are closed.