கொரோனா தொற்று காரணமாக பதஞ்சலி தலைவர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பதஞ்சலி பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் பாபா ராம்தேவும் உள்ளார். நிலைத் தகவலில், "Patanjali Products - पतंजलि उत्पाद chairman Acharya Bal Krishna Bala Krishna பதஞ்சலி சேர்மன் ஆச்சார்ய பாலகிருஷ்ணா. கோமியம் குடித்தால், கொரோனா சரியாகி விடும், என்று சொல்லியவர், இன்று தனக்கு, கோவிட் வந்து, சுவாசிக்க முடியாமல், போனதும், கோமியத்தை குடிக்காமல், பிரபல தனியார் மருத்துவமனைக்கு, வந்து அட்மிட் ஆகியுள்ளார். விழித்துக் கொள்ளுங்கள்,, ஊருக்கு தான் உபதேசம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை Krishnagiri District News/கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜூன் 2ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அலோபதி மருத்துவத்தை யோகா குரு பாபா ராம்தேவ் அவமதித்ததாக டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் அவருக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பரபரப்பான செய்தியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில், சமூக ஊடகங்களில் இந்த தகவல் பரவி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பதஞ்சலி பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான செய்தி கிடைத்தது. அந்த செய்தியில், ஃபுட் பாய்சன் காரணமாக அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது என்றும், உடனடியாக அவர் ரிஷிகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive

இது தொடர்பான வீடியோ கிடைக்கிறதா என்று யூடியூபில் தேடினோம். அப்போது, பாலகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்து வரும் காட்சிகள் மற்றும் அவர் சிகிச்சை பெறும் புகைப்படத்துடன் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் பல முன்னணி ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இதே வீடியோவை காட்சி ஊடகங்கள் 2019ம் ஆண்டே வெளியிட்டிருந்தன. கொரோனா தொற்று 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில்தான் சீனாவில் வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணா ஃபுட் பாய்ஸன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோவை, தற்போது அவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பகிரப்படும் வீடியோ 2 ஆண்டு பழையது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பதஞ்சலி தலைவர் பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False