FACT CHECK: கருணாநிதிக்கு மட்டும் ட்விட்டர் உரை எழுதியது ஏன் என்று கேட்டு பா.ஜ.க நாராயணன் ட்வீட் வெளியிட்டாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் சிறு குறிப்பு வெளியானதற்கு பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி வருத்தப்பட்டதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டது போன்ற ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளது. ட்விட்டர் டிரெண்டிங்கில் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகிரப்படும் ஹேஷ்டேக் பற்றி சிறு குறிப்பு வெளியாகி இருப்பதன் ஸ்கிரீன்ஷாட்டை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “பாரதம் காக்கும் நம் பாரத பிரதமர் அவர்களுக்கு இந்த ட்விட்டர் என்றாவது இது போன்ற உரை எழுதியதா? 

ஏன் #kalaingar98 க்கு மட்டும் என்ற  கேள்வி மக்கள் மனதில் எழாமல் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்கிரீன்ஷாட் பதிவை Unofficial:பிஜேபி தொண்டர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜூன் 3 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரில் போலியான அக்கவுண்ட் உருவாக்கி பதிவுகளை உருவாக்கி வெளியிடுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பெயரில் போலியான ட்விட்டர் அக்கவுண்ட் இருப்பது பற்றி ஏற்கனவே நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதில், நாராயணனின் அசல் ட்விட்டர் பக்கத்தில் உள்ள படத்தை பயன்படுத்தி அவர் வெளியிட்டது போன்று பல பொய்யான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையில் நாராயணன் திருப்பதி கூறியதா, அல்லது அவர் பெயரில் உள்ள போலி நபர் கூறியதா என்று தெரியாமல் பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

இந்த நிலையில், “பாரதம் காக்கும் நம் பாரத பிரதமர் அவர்களுக்கு இந்த ட்விட்டர் என்றாவது இது போன்ற உரை எழுதியதா? 

ஏன் #kalaingar98 க்கு மட்டும் என்ற  கேள்வி மக்கள் மனதில் எழாமல் இல்லை.” என்று நாராயணன் திருப்பதி வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மை என்று நம்பி நாராயணன் திருப்பதியை அநாகரீக வார்த்தைகளால் திட்டியும் வருகின்றனர். எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு பதிவும் இல்லை. 

எனவே, நாராயணன் திருப்பதி பெயரில் இயங்கும் போலி அக்கவுண்ட்டை தேடிப் பிடித்தோம். அதில், கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏராளமான பதிவுகள் வெளியாகி இருந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்விட் பதிவும் இருந்தது.

Archive

முன்பு நாராயணன் திருப்பதி ட்விட்டர் பக்கம் போலவே ப்ரொஃபைல் போட்டோ, கவர் போட்டோ இருந்தது. ஆனால் தற்போது அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் சுய விவர குறிப்பில், “Parody by tweets,  @நாராயணன்௩  என்ற பிரபலத்தின் ரசிகன். அந்த நல்ல உள்ளத்தின் மனசாட்சியாக நான் இருந்தால், அது என்ன சொல்லும் என்பதையே இங்கு கற்பனை பதிவாக இடுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

Archive

மேலும், இந்த போலியான ட்விட்டர் ஐடி தன்னுடையது இல்லை என்று ஏற்கனவே நாராயணன் திருப்பதி தெரிவித்திருந்தார்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

யாரோ ஒரு விஷமி நாராயணன் திருப்பதியின் பெயரில் கற்பனையாக வெளியிட்ட பதிவை, நாராயணன் திருப்பதிதான் வெளியிட்டார் என்று நினைத்து பலரும் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கருணாநிதி தொடர்பாக நாராயணன் திருப்பதி பெயரில் பரவும் ட்வீட் பதிவு உண்மையில்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கருணாநிதிக்கு மட்டும் ட்விட்டர் உரை எழுதியது ஏன் என்று கேட்டு பா.ஜ.க நாராயணன் ட்வீட் வெளியிட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False