FACT CHECK: சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பை திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை அறிவித்ததா? - போலி நியூஸ் கார்டால் பரபரப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பைத் திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை அறிவித்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "இரு தினங்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பில், சில தவறுகள் நடந்துள்ளதால் அதனை நாங்கள் முழுமையாக திரும்ப பெற்றுக்கொள்கிறோம். விரைவில் குறைகளை சரிசெய்து முழுமையான கருத்துக்கணிப்பு வெளியாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், "கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தினீர்கள் திமுகவின் கைக்கூலி கார்த்திகைச் செல்வனின் முகத்திரையை ஆதாரத்துடன் கிழித்த மாரிதாஸ். இப்போது தவறு என்று ஒத்துக் கொள்கிறது புதிய தருதலை டிவி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Kavin Tamil என்ற ஃபேஸ்புக் ஐடி நபர் 2021 மார்ச் 25 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அதை வைத்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. 151-158 இடங்களில் தி.மு.க வெற்றி பெறும் என்று வெளியான பதிவை மாற்றி அ.தி.மு.க வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை கூறியதாக நியூஸ் கார்டு பரவியது. அதைத் தொடர்ந்து, அதிமுக பெற்ற 39 சதவிகிதத்தை விட தி.மு.க பெற்ற 38.51 சதவிகிதம் பெரியது என்று புதிய தலைமுறை கூறியது என்று போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டுகள் பரவின. அவை தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் தாங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பைத் திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை கூறியதாக சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது. மாரிதாஸ் என்ற யூடியூபர் கருத்துக் கணிப்பு பற்றி விளக்கம் அளித்ததாகவும், அதைத் தொடர்ந்து புதிய தலைமுறை இந்த அறிவிப்பை வெளியிட்டது என்றும் பலரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டில் 2021 மார்ச் 24 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துக் கணிப்பு முடிவைத்தான் பிரதானமாக வைத்திருந்தது. கருத்துக் கணிப்பை திரும்பப் பெறுவதாக கூறியிருந்தால் அதை முன்னிலைப்படுத்த வேண்டியது இல்லையே என்று செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம்.
புதிய தலைமுறை இணையதளத்தில் அப்படி எந்த ஒரு செய்தியோ, அறிவிப்போ இடம் பெறவில்லை. கருத்துக் கணிப்பில் தவறு நிகழ்ந்துவிட்டது என்று புதியதலைமுறை கூறியிருந்தால் அதுவே மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். பலரும் அதைப் பற்றி கருத்து தெரிவித்திருப்பார்கள். ஆனால், அப்படி ஒரு சிறு செய்தி கூட கிடைக்கவில்லை.
எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டு பற்றிக் கேட்டோம். இது போலியானது என்று அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் கருத்துக் கணிப்பு முடிவுகளைத் திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை கூறியது என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வெளியான கருத்துக்கணிப்பை திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை அறிவித்தது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பை திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை அறிவித்ததா? - போலி நியூஸ் கார்டால் பரபரப்பு
Fact Check By: Chendur PandianResult: False