லாக்அப் மரணம் தொடர்பாக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சீமான் பாராட்டினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

ஸ்டாலின் ஆட்சியிலாவது லாக்அப் மரணத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். எந்த ஆட்சி வந்தாலும் லாக்கப் மரணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அய்யா ஸ்டாலின் ஆட்சியிலாவது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அய்யா எடப்பாடி ஆட்சியில் நடந்த லாக்கப் மரணம் இன்னும் விசாரணையில் தான் உள்ளது – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: X Post I Archive

உண்மை அறிவோம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளி ஒருவர் போலீஸ் சிகிச்சையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Archive

ஜூன் 30, 2025 அன்று தான் “அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்!  நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும்  காவல்துறை விசாரணை  படுகொலைகளே சாட்சி!” என்று சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்குள்ளாக தமிழ்நாடு அரசைப் பாராட்டி அவர் பேட்டி அளித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டு பார்க்க அச்சு அசலாக புதிய தலைமுறை வெளியிட்டது போல உள்ளது. ஆனாலும் ‘லாக்அப்’ என்பதை ‘லாக்கப்’ என்று பிழையாக எழுதியிருந்தனர். எனவே, இதை புதிய தலைமுறை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்துகொள்ள ஆய்வைத் தொடர்ந்தோம்.

புதிய தலைமுறை ஃபேஸ்புக் மற்றும் அதன் இணையதளத்தில் இப்படி ஏதேனும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. அதே போன்று சீமான் அப்படி பேட்டி அளித்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

லாக்அப் மரணம் தொடர்பாக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சீமான் பாராட்டியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:லாக்அப் மரணம் தொடர்பாக ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சீமான் பாராட்டினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply