
‘’மு.க.ஸ்டாலின் வன்னியர் மக்களை விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

அக்டோபர் 17, 2020 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’வன்னியர்களுக்கு என்ன நடந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றி துளியும் கவலை இல்லை. – மு.க.ஸ்டாலின்,’’ என எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாள்தோறும் அரசியல் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளும், பரஸ்பர விமர்சனங்களையும் அரசியல் கட்சிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதையொட்டி பகிரப்பட்டு வரும் தகவல்தான் நாம் மேலே கண்ட நியூஸ் கார்டும். உண்மையில் அது எடிட் செய்யப்பட்ட ஒன்றாகும். எப்படி என்றால், இதில் உள்ள தேதி, ஃபாண்ட் வித்தியாசங்களை நன்கு உற்று கவனியுங்கள். அத்துடன், இப்படி வெளிப்படையாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் சமூக அக்கறையின்றி ஊடகங்களில் பேட்டி தரமாட்டார்.

இதுபற்றி, புதிய தலைமுறை ஊடகம் செய்தி ஏதேனும் வெளியிட்டுள்ளதா என அறியும் நோக்கில், அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடினோம். அங்கே, குறித்த அக்டோபர் 16, 2020 அன்றைய தேதியில் இதுபோல எந்த நியூஸ் கார்டும் ஸ்டாலின் பற்றி வெளியிடப்படவில்லை. ஆனால், அக்டோபர் 14, 2020 அன்று வெளியிடப்பட்டிருந்த புதிய தலைமுறை நியூஸ் கார்டு, நாம் ஆய்வு செய்யும் தகவலுடன் ஒத்துப் போவதைக் கண்டோம். எனினும், அதில் இருந்த கன்டென்ட் வேறு ஒன்றாகும்.
அதனை ஆதாரத்திற்காக ஒப்பீடு செய்து கீழே பகிர்ந்துள்ளோம்.

எனினும், இவ்விரு நியூஸ் கார்டுகளுக்கும் இடையே தேதி ஒப்பீடு குழப்பமாக இருந்ததால், இதன்பேரில், புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் ஹெட் மனோஜை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.
குறித்த நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர், ‘’இது புதிய தலைமுறை பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட நியூஸ் கார்டு; உண்மையல்ல,’’ என்றார்.
எனவே, இது போலி நியூஸ் கார்டு என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மு.க.ஸ்டாலின் வன்னியர் மக்களை விமர்சித்தார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
