ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு அயோத்தி கோவிலுக்கு வந்த ராகுல் பார்த்து பக்தர்கள் மோடி மோடி என்று கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கோவில் ஒன்றிலிருந்து ராகுல் காந்தி வெளியே வருகிறார். அப்போது மோடி மோடி என்று கோஷம் எழுப்பப்படும் வீடியோ ஒன்றின் ஃபேஸ்புக் லிங்கை வாசகர் ஒருவர் நமக்கு இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த ஃபேஸ்புக் பதிவில், "*ராகுல் காந்தி* ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக நாமினேசன் தாக்கல் செய்துவிட்டு, *அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு செய்தார்.!* கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் ராகுல் காந்தி வரும்போது *"மோடி, மோடி"* என ஆரவாரத்துடன் எழுச்சி முழக்கம் எழுப்பினார்கள்.!

இந்த நிலப்பரப்பில் அனைத்து *இந்துக்களின்* அன்பையும் பெற்ற ஒற்றை தலைவனாக *மோடியை* தவிர வேறு எவரும் வந்தது இல்லை.! *ரவீந்திரன் துரைசாமி,* அரசியல் விமர்சகர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மே மாதம் 3ம் தேதி ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றதாகவும் அங்கு பக்தர்கள் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பியதாகவும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோவை சில மாதங்களுக்கு முன்பு பார்த்த நினைவு இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் (Bharat Jodo Nyay Yatra) போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஏ.என்.ஐ செய்தி ஊடகம் பிப்ரவரி 3, 2024 அன்று வெளியிட்டிருந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகளைக் காண முடிந்தது. ராகுல் காந்தி ஜார்கண்டில் உள்ள பாபா பைத்யநாத் ஆலயத்துக்கு வந்த போது பக்தர்கள் "மோடி, மோடி" என்று கோஷம் எழுப்பினர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

இதன் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை குஜராத் மாநில பாஜக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2024 பிப்ரவரி மாதம் 3ம் தேதி பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது. மேலும், பல ஊடகங்களிலும் இது தொடர்பாக வெளியான செய்திகளையும் காண முடிந்தது.

2024 பிப்ரவரியில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் போது ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற வீடியோவை எடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்து விட்டு கோவிலுக்கு வந்த ராகுல் காந்திக்கு மக்கள் எதிர்ப்பு என்பது போன்று தவறான வீடியோவை பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.

Fact Crescendo English

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2024 பிப்ரவரி இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் போது ராகுல் காந்தி கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது மோடி மோடி என்று மக்கள் கோஷம் எழுப்பிய வீடியோவை 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராகுல் காந்தி ரேபரேலியில் வேட்பு மனு தாக்கல் செய்த உடனே அயோத்திக்கு வந்தாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False