இந்திரா காந்தியின் உடலுக்கு ராஜிவ் காந்தியும் ராகுல் காந்தியும் கல்மா ஓதுகின்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive

ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி, நரசிம்மராவ் உள்ளிட்ட ஏராளமானோர் இறந்தவர் ஒருவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், "இந்த புகைப்படம் மிகவும் சிரமத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திராவின் பிணத்தின் முன் ராகுலும் ராஜீவ் காந்தியும் கல்மா ஓதுகிறார்கள், ஆனாலும் இவர்களை இந்துக்கள் என்றுதான் நம் நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "இந்தப் புகைப்படம் அரிதிலும் அரிது. இந்திராவின் பிணத்தின் முன் ராஹுலும், ராஜீவ் காந்தியும் கல்மா ஓதுகிறார்கள். இந்திய மக்கள் முன்பு இவர்கள் இந்துக்களாக நடிக்கிறார்கள் இத்தாலியில் கிறிஸ்தவராக இருக்கிறார்கள் காஷ்மீரத்திலும் அரபு நாடுகளிலும் இஸ்லாமியர்கள் என்று பறைசாற்றுகிறார்கள் உண்மையில் யார் இவர்கள் ?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திரா காந்தி இந்து அல்ல; அவர் ஒரு இஸ்லாமியர் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தற்போது மீண்டும் அப்படி ஒரு முயற்சியை தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் மேற்கொண்டுள்ளனர். அவர் இந்துவாக வாழ்ந்தார், இந்து முறைப்படி திருமணம் நடந்தது, இந்து முறைப்படி அவரது இறுதிச் சடங்கு நடந்தது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

தற்போது, இந்திரா காந்தியின் உடலுக்கு கல்மா ஓதப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது பழைய வீடியோ ஒன்று கிடைத்தது.

அதில், கான் அப்துல் கஃபார்கானின் இறுதிச் சடங்கில் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி பங்கேற்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘எல்லை காந்தி’ என்று அழைக்கப்பட்டவர் கான் அப்துல் கஃபார் கான்.

கடந்த 1988ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் ராஜிவ் காந்தி விமானத்தில் இறங்கியதில் இருந்து அஞ்சலி செலுத்திவிட்டு, மீண்டும் விமான நிலையத்துக்கு வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது வரை அந்த வீடியோவில் காண முடிந்தது. ராஜிவ் காந்தி வந்ததும் கான் அப்துல் கஃபார் கான் கான் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி திறக்கப்படுகிறது. ராஜிவ் காந்தி அஞ்சலி செலுத்துகிறார். அப்போது சவப்பெட்டியில் உள்ளவரின் முகத்தை காட்டுகிறார்கள். அது கான் அப்துல் கஃபார் கானின் உடல் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கான் அப்துல் கஃபார் கான் 1988ம் ஆண்டு இறந்தார், அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். எனவே, இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கு தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை தேடி எடுத்தோம்.

அதில் சிறுவனாக ராகுல் காந்தி இருக்கிறார். ஆனால், கான் அப்துல் கஃபார் கான் இறுதிச் சடங்கில் வளர்ந்து, தன் தந்தை ராஜிவ் காந்தி தோளோடு தோள் நிற்பதைக் காண முடிகிறது. இதன் மூலம் இந்திரா காந்தி மறைந்தபோது அவரது உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி ராகுல் காந்தியும் ராஜிவ் காந்தியும் அஞ்சலி செலுத்தினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: gettyimages.in

முடிவு:

எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கானின் இறுதிச் சடங்கில் ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி பங்கேற்ற புகைப்படத்தை இந்திரா காந்திக்கு இஸ்லாமிய முறைப்படி அஞ்சலி செலுத்தினார்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்திரா காந்தியின் உடலுக்கு கல்மா ஓதிய ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False