
தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையம் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பொதுக் கூட்டத்திற்குக் கூடியது போன்று மக்கள் கூட்டமாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீஹார் மாநில தலைமை தேர்தல் கமிஷன் நேற்று காலை முதல் முற்றுகை இடப்பட்டு இருக்கும் கண் கொள்ளா காட்சி! அமைதியாக முறையில் காரோ செய்யப்பட்டு வருவதால் பதற்றம் நீடிக்கிறது. ஆனால், பொது அமைதிக்கு எந்த பங்கமும் ஏற்பட வில்லை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாக்கு பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநில தேர்தல் கமிஷனை மக்கள் முற்றுகையிட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம்தான் நடத்தும். இதற்கென்று ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமை தேர்தல் அதிகாரி இருப்பார். மாநில தேர்தல் ஆணையம் என்று மாநில அளவில் இருக்கும். உள்ளாட்சித் தேர்தல்களை இந்த மாநில தேர்தல் ஆணையம் நடத்தும். இந்த இரண்டு ஆணையங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது.
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் பீகார் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையத்தை மக்கள் முற்றுகை முற்றுகையிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதாக செய்திகள் எதுவும் இல்லை. இவ்வளவு பெரிய கூட்டம் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். ஆனால், எந்த ஊடகத்திலும் இப்படி ஒரு செய்தி நமக்குக் கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். கடந்த நான்கு – ஐந்து நாட்களாகப் பலரும் இந்த வீடியோ மற்றும் தகவலை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இவற்றுக்கிடையே நவம்பர் 9ம் தேதி வெளியான பதிவு ஒன்றும் நமக்கு கிடைத்தது. பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ம் தேதி வெளியாகி இருந்தது. அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததால் இது தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கூடிய கூட்டமாக இருக்காது என்பது உறுதியானது.

நமக்கு கிடைத்த பதிவில் ஆர்ஜேடி (ராஷ்டிரிய ஜனதா தளம்) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இது ஆர்ஜேடி தேர்தல் பிரசார கூட்டமாக இருக்கலாம் என்று தெரிந்தது. ஆனால், இதை உறுதி செய்வதற்கு எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. நமக்குக் கிடைத்த வீடியோ நன்றாக தெளிவாக இருந்தது. அதிலிருந்த கட்டிடத்தில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது பீகார் மாநிலத்தில் உள்ள Chiraiya என்ற ஊரில் உள்ள பள்ளிக்கூட கட்டிடம் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தைக் கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்று வாசல் கொண்ட பள்ளிக்கூட கட்டிடம் கிடைத்தது.
இதன் மூலம் இந்த கூட்டம் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட கூட்டம் இல்லை என்பது உறுதியானது.
முடிவு:
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேர்தல் பிரசார கூட்டத்தின் வீடியோவை பீகார் மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மக்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:பீகார் மக்கள் தேர்தல் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்களா?
Fact Check By: Chendur PandianResult: False


