
ஜெயலலிதாவை கொன்றது யார் என்று தெரிய வேண்டும் என்றால் தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் என்று சசிகலா கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சசிகலா நடராஜன் என்ற பெயரில் வெளியான ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக தொண்டர்களே நமது அம்மாவை கொன்றது யார் என்று தெரிய வேண்டுமா ?? அதற்கு ஒரே வழி நாம் ஒன்றாக திமுக விற்கு வாக்களிப்பது. அத்தனை உண்மைகளும் வெளிவரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “சசிகலா அம்மையார் அவர்களுக்கு நன்றி உங்கள் வாக்கு உதயசூரியன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Gunasekaran Sekar என்பவர் 2021 மார்ச் 17 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவுக்கு சமூக ஊடகங்களில் கணக்கு இல்லை என்று ஏற்கனவே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம். இதற்கிடையே, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துவிட்டார். திமுக-வுக்கு எதிராக ஒரு தாய் பிள்ளையாக இணையுங்கள் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அப்படி இருக்கும் நிலையில், தி.மு.க-வுக்கு ஆதரவாக அவருடைய பெயரில் தொடர்ந்து பல ட்வீட்கள் சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை வெளி வர வேண்டும் என்றால் தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் என்று சசிகலாவே கூறிவிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

Sasikala Natarajan @SasikalaOffl என்ற பெயரில் ட்விட்டர் பக்கம் உள்ளதா என்று பார்த்தோம். Parody, A2 – Next Chief Minister of Tamil Nadu என்று சுய குறிப்பிட்டு ட்விட்டர் கணக்கு இருந்தது. இது சசிகலா பெயரில் இருக்கும் போலியான கணக்கு என்பது உறுதியாகிறது. இதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்விட்டர் பதிவு உள்ளதா என்று பார்த்தபோது, 2021 மார்ச் 16ம் தேதி இந்த பதிவு வெளியாகி உள்ளது. தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு எதிராக, தி.மு.க-வுக்கு ஆதரவாக அதில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.
இந்த ட்விட்டர் பக்கம் போலியானது என்பதை இந்த பக்கத்துக்கு வருபவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இந்த ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக் போன்று மற்ற சமூக ஊடகங்களில் பரப்பும்போது சசிகலா சொன்னதாகவே பலரும் கருதுவதைக் காண முடிகிறது. இந்த ட்வீட் சசிகலா வெளியிட்டது இல்லை என்பதால் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மை வெளிவர தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் என்று சசிகலா கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தி.மு.க-வுக்கு வாக்களிக்க சொன்னாரா சசிகலா?– போலி ட்வீட்டால் பரபரப்பு
Fact Check By: Chendur PandianResult: False
