அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கூறியதற்கு எதிராக, அரைமண்டைத்தனமாக பேசாதீர்கள் முதல்வரே என ஊடகவியலாளர் ஒருவர் கூறினார் என நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "அரமண்டை தனமாக பேசாதீர்கள்! மெக்காலே கல்வி முறையை ஏற்றுக்கொண்டு அயல்நாட்டு நிறுவனங்களில் கூலிவேலை பார்க்கும் அடிமைத்தனத்தை வளர்ச்சி என்று அரமண்டை தனமாக பேசாதீர்கள் முதல்வர் அவர்களே! - ஊடகவியலாளர் விஷன் முதல்வர் மீது காட்டம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Sankar Sankar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வேறு ஒரு ஊடகத்தில் பணியாற்றும் ஒரு செய்தியாளரின் பதிவை முன்னணி காட்சி ஊடகங்கள் வெளியிடாது. மேலும், இந்த நியூஸ் கார்டு வழக்கமாக நியூஸ் 7 வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. இதன் வடிவமைப்பு, தமிழ் ஃபாண்ட் உள்ளிட்டவற்றில் வித்தியாசத்தைக் காண முடிந்தது. எனவே, யாரோ விஷமத்தனமாக உருவாக்கிய நியூஸ் கார்டை, பகிர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

முதலில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்ய, அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று "FAKE" முத்திரை குத்தி நியூஸ் 7 தமிழ் பதிவிட்டிருந்தது. அதில், அந்த செய்தியாளரின் படத்தை மறைத்திருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.

அடுத்ததாக அந்த குறிப்பிட்ட செய்தியாளர் இப்படி ஏதும் கருத்தை வெளியிட்டுள்ளாரா, அவரது கருத்தை நியூஸ் 7 தமிழ் பெயரைப் பயன்படுத்தி போலியான நியூஸ் கார்டை உருவாக்கிப் பரப்பியிருக்கிறார்களா என ஆய்வு செய்தோம்.

https://twitter.com/ThamizhVishan/status/1536280525815435264

Archive

அந்த செய்தியாளரின் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில், "ஆடு மேய்த்தால் அரசு வேலை, பொட்டிக்கடை வைத்திருந்தாலும் நீதான் அதற்கு முதலாளி போன்ற அரைமண்டை பிரச்சாரங்களை நம்பி வாழ்க்கையைத் தொலைச்சிடாதீங்கடா, படிச்சு தொலைங்கடா என்கிறார்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதாவது படிக்காமல் கூட முன்னேறலாம் என்று கூறுபவர்களுக்கு முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார் என்பது போல, மு.க.ஸ்டாலினின் கருத்தை ஆதரித்துப் பதிவிட்டிருப்பது தெரிந்தது. இதை அப்படியே மாற்றி, ஸ்டாலினை விமர்சிப்பது போன்று போலியாக நியூஸ் கார்டு உருவாக்கியிருப்பது தெரிந்தது.

Archive

இந்த போலியான நியூஸ் கார்டு பற்றி ஏதும் பதிவிட்டுள்ளாரா என்று பார்த்தோம். அப்போது, ட்விட்டரில் ஒருவர் வெளியிட்டிருந்த இந்த நியூஸ் கார்டுடன் கூடிய பதிவுக்கு "FAKE" என்று பதில் அளித்திருந்ததைக் காண முடிந்தது. இதன் அடிப்படையில் அரை மண்டைத்தனமாக பேசாதீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை செய்தியாளர் ஒருவர் விமர்சித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அரை மண்டைத்தனமாக பேசாதீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஊடகவியலாளர் ஒருவர் விமர்சித்தார் என்று நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அரை மண்டைத்தனமாக பேசாதீர்கள் என்று மு.க.ஸ்டாலினை ஊடகவியலாளர் விஷன் விமர்சித்தாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False