
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக இடிந்து விழும் கட்டிடங்கள் என்று பல வீடியோக்களின் தொகுப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழும் பல வீடியோக்களை சேர்த்து ஒரே வீடியோவாக பதிவிட்டுள்ளனர். வீடியோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட – துருக்கி, சிரியா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Samuel என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த வீடியோ பதிவை 2023 பிப்ரவரி 11ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழும் காட்சி என்று பல பழைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதுவும் இப்படிப்பட்ட வீடியோக்களில் ஒன்றாக இருக்குமா அல்லது உண்மையா என்று அறிய இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அடுக்குமாடி ஒன்று இடிந்து விழுவதைச் சாலையில் நின்று எடுத்த வீடியோவை முதலில் ஆய்வு செய்தோம். அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: YouTube
அரபி மொழியில் பதிவிடப்பட்டிருந்த தகவலை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் ஜட்டா சாலை, அல் கிரியோ 3, பழைய மெக்கா சாலை என்று குறிப்பிடப்படப்பட்டிருந்தது. ஜட்டா என்பது சௌதி அரேபியாவின் தலைநகரமாகும். அங்கு வளர்ச்சிப் பணிகளுக்காகப் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருவதாக பல செய்திகள், வீடியோக்கள் கிடைத்தன. சௌதி அரேபியாவில் குறிப்பிட்ட அந்த பகுதியில் எடுக்கப்பட்ட கூகுள் மேப் பழைய படத்தையும் எடுத்தோம். இதன் மூலம் இந்த வீடியோ துருக்கி – சிரியா நில நடுக்க வீடியோ இல்லை என்பது உறுதியானது.
இரண்டாவது வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் துருக்கி ஊடகவியலாளர்கள் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழும் காட்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் பல ஊடகங்களும் அந்த வீடியோவை பகிர்ந்திருந்தன. tineye.com என்ற இமேஜ் தேடல் தளத்தில் பார்த்த போது பிப்ரவரி 6, 2023ம் தேதியிலிருந்துதான் இந்த வீடியோ செய்தி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வீடியோ உண்மையானதாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
அடுத்ததாக கட்டுமானப் பணியாளர்கள் முன்னிலையில் கட்டிடம் இடிக்கப்படும் வீடியோவை ஆய்வு செய்தோம். அந்த வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, ஜூன் 21, 2022ம் தேதி யூடியூபில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து தேடிய போது சௌதி அரேபியாவில் அந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற தகவல் நமக்குக் கிடைத்தது.
இதன் மூலம் துருக்கி நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் அந்நாட்டுக்கு தொடர்பில்லாத வேறு பல வீடியோக்களை இணைத்து தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சௌதி அரேபியாவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் வீடியோவை சிரியா துருக்கி நிலநடுக்க காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:சௌதி அரேபிய வீடியோவை எடுத்து துருக்கி நிலநடுக்கக் காட்சி என்று தவறாக பரப்பும் நெட்டிசன்கள்!
Fact Check By: Chendur PandianResult: Partly False


