“மோடிக்கு ஆதரவு கொடுங்கள்” என்று பாகிஸ்தான் முஸ்லிம் கூறியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

இந்திய இஸ்லாமியர்களே திருந்துங்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவு தாருங்கள் என்று பாகிஸ்தானைச் சார்ந்த முஸ்லிம் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியர் ஒருவர் தான் பாகிஸ்தானிலிருந்து பேசுவதாக வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “_அஸ்லாம் அலைக்கும். நான் *பாகிஸ்தானில்* இருந்து ஆசிப் சர்தாரி பேசுகிறேன். எனது இனிய *இந்திய இஸ்லாமியர்களே*…. நீங்கள் இந்தியாவில் நல்ல உணவுகள், பழங்கள், இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள். ( இப்பொழுது அழுகைக்கு மாறுகிறார்). *எங்கள் வீட்டில் உணவில்லை. எங்கள் வாகனங்களுக்கு பெட்ரோலில்லை. கையில் செலவுக்கு பணமில்லை… பஞ்சமும் பசிப் பட்டினியும் பாக்கிஸ்தானில் தலை விரித்தாடுகிறது.* பாக்கிஸ்தான் சீரடையும் நிலையில் எங்கள் தேசம் இல்லவே இல்லை. *இந்திய இஸ்லாமியர்களே … திருந்துங்கள்…* உங்கள் தேச சூழல் அற்புதமாக உள்ளது. உங்கள் *பிரதமர் மோடி* அவர்களின் ஆட்சிக்கு ஆதரவு அளியுங்கள். மோடி அற்புதமானவர். நாங்களெல்லாம் அவர் பாக்கிஸ்தான் மீது போர் தொடுத்து, எங்கள் நாட்டை உங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டால் எங்கள் பொருளாதாரம் மேம்படுமே…. சாப்பிடுவதற்காவது ஏதாவது கிடைக்குமே என ஏங்குகிறோம். நீங்கள் இந்தியாவிற்கு *துரோகம் செய்யாதீர்கள்.* நீங்கள் இப்பொழுது ஒரு *பாதுகாப்பான நிலவில் வளமாக இருக்கிறீர்கள்.* எதிர்கட்சிகள் பேச்சைக் கேட்டு பாழாகிவிடாதீர்கள் என்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

“பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஆனால், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை நன்றாக உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய இஸ்லாமியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று பாகிஸ்தானைச் சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் பேசுவது போன்று வீடியோ உள்ளது. இந்த வீடியோ உண்மைதானா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

இந்த வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இந்த வீடியோவை ஓராண்டுக்கும் மேலாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், இந்த வீடியோ தொடர்பாக வேறு தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வீடியோவில் dhirendra_raghav_79 என்ற இன்ஸ்டாகிராம் ஐடி-யை காண முடிந்தது. எனவே, இன்ஸ்டாகிராமில் அந்த ஐடி-யை தேடி எடுத்தோம்.

அது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருக்கும் நபரின் இன்ஸ்டாகிராம் பக்கம் என்பது தெரியவந்தது. இந்து பூசாரி, இஸ்லாமியர், பஞ்சாப் சர்தார்ஜி, சாய்பாபா என பல வேஷங்களில் அந்த நபர் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அந்த நபரின் சுயவிவரக் குறிப்பு பகுதியைப் பார்த்தோம். அதில் அவர் தன்னுடைய பெயர் தீரேந்திர ராகவ் (Dhirendra Raghav) என்றும் நடிகர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சார்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை தேடிப் பார்த்தோம். ஆனால், அந்த வீடியோவை கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில் அந்த வீடியோவை வைத்து வட இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தியின் வீடியோவை அவர் பதிவிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதே போல் ஃபேஸ்புக் ரீல்ஸ் பகுதியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் பதிவிட்டிருந்ததையும் கண்டு எடுத்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியர் போல வேடமிட்டு ஏராளமான வீடியோக்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனுடன் இந்திய தேசப் பற்றாளராக ஏராளமான வீடியோக்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இவரது வீடியோக்களை பார்க்கும் போது இவர் பாஜக ஆதரவாளர் போலத் தெரிகிறது.

நம்முடைய ஆய்வில் அவர் தன்னை இந்தியர் என்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் வசிப்பவர் என்றும் குறிப்பிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் இஸ்லாமியர் இந்திய இஸ்லாமியர்களுக்கு மோடியை ஆதரிக்கும்படி கூறியதாக பரவும் வீடியோ போலியானது, நடிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இது என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சமூக ஊடகங்களில் நடித்து வீடியோ வெளியிடும் உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் வசிக்கும் ஒருவர் பாகிஸ்தான் முஸ்லிம் போல வேடமிட்டு மோடியை ஆதரிக்கும்படி இந்திய முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறும் வீடியோவை வௌியிட்டுள்ளார் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“மோடிக்கு ஆதரவு கொடுங்கள்” என்று பாகிஸ்தான் முஸ்லிம் கூறியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False