
பீட்சா டெலிவரி செய்த இளைஞரைப் பார்த்த அவரது பள்ளிக்கூட தோழி கேவலப்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இளைஞர் ஒருவர் பீட்சா டெலிவரி செய்யும் இருசக்கர வாகனத்தில் வருகிறார். அவருடன் பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவரைக் கேவலப்படுத்த வேண்டாம்
ஒரு பீட்சா டெலிவரி பையன் தனது பள்ளித் தோழியை வீதியில் சந்திக்கிறான்.’நீ பள்ளியில் எல்லோரையும் ஊக்குவித்தாய்… இப்போது பீட்சா டெலிவரி செய்கிறாயா?’ என்கிறாள். ஆண் குழந்தைகளின் வாழ்க்கை எளிதானதல்ல. சில நேரங்களில் பொறுப்புகள் வயதுக்கு முன்பே வரும். கனவுகள் புதைந்துவிடும். சுயமரியாதை சோதிக்கப்படும். பீட்சா டெலிவரி செய்வது வெட்கக்கேடானதல்ல. எப்போதும் ஒருவரின் வாழ்க்கைககான போராட்டத்தை கேலி செய்யாமல் இருப்போம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உண்மை அறிவோம்:
தன்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்த தோழன் ஒருவன் வளர்ந்து இளைஞனான பிறகு பீட்சா டெலிவரி செய்வதை கண்ட பெண் ஒருவர் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் பேசியதாக வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவை பார்க்கும் போது ஸ்கிரிப்டட் வீடியோ போல உள்ளது. இதை பலரும் உண்மையான சம்பவம் என்று கருதி பதிவிட்டு வருவதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Instagram
இந்த பதிவை முதலில் ஆய்வு செய்தபோது, இது நாடகம் என்பது போல குறிப்பிட்டு ri_shika3317 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வீடியோ உண்மையில்லை, பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்ட நாடக வீடியோ என்று குறிப்பிட்டு இந்த வீடியோவுடன் தொடர்புடைய பெண் வெளியிட்டிருந்த பதிவு மட்டுமே இருந்தது. அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இளைஞரின் வேறு சில வீடியோக்களையும் காண முடிந்தது.
அதே நேரத்தில் singhtarun000 என்ற மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதில், இந்த வீடியோவில் இடம்பெற்ற நபர் நான்தான். வீடியோவுக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பக்கத்தில் இந்த வீடியோ தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த விளக்க பதிவும் இருந்தது. அவரது ஃபேஸ்புக், யூடியூப் பக்கங்களுக்கான இணைப்பையும் அவர் கொடுத்திருந்தார்.
அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் அந்த விளக்க வீடியோ இருந்தது. அதில், “நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. இந்த வீடியோவில் நான் நடித்தேன்” என்று கூறியுள்ளார். கேலி கிண்டல், அவமானத்துக்கு ஆளான நபர் என்று கூறப்பட்ட இளைஞரே இந்த வீடியோ உண்மையானது இல்லை. அதில் நடித்தேன் என்று விளக்கம் அளித்துவிட்டார். இதன் அடிப்படையில் பீட்சா டெலிவரி செய்த நபரை கேவலப்படுத்திய தோழி என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பீட்சா டெலிவரி செய்த தன்னுடைய பழைய பள்ளிக்கூட தோழனை அவமரியாதை செய்த பெண் என்று பரவும் வீடியோ உண்மையானது இல்லை, திரைக்கதை செய்து தயாரிக்கப்பட்ட வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“பீட்சா டெலிவரி செய்த நண்பனைக் கேவலப்படுத்திய தோழி” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


