பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்துடன் கூடிய இந்தியில் எழுதப்பட்ட புகைப்படத்துடன் இணையதள இணைப்பு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “* பிரேக்கிங் நியூஸ்!  பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.*

* எங்கள் திட்டம் தங்கள் வாழ்க்கையின் அடிப்படைகளை வாங்க முடியாத நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நபர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது*

* விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன!  விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே 10000 ரூபிள் பெறத் தொடங்கியுள்ளனர்.*

* காலக்கெடுவை:07/10/2024*

 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இணைப்பு பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விண்ணப்பிக்கும்படி பதிவிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபிள் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தது. இந்திய அரசு எதற்காக ரஷ்ய நோட்டு மதிப்பில் பணத்தை செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இதன் மூலம் இது ஏதோ தவறான பதிவு என்பது உறுதியானது. 

சமூக ஊடகங்களில் பலரும் இந்த பதிவை பல நாட்களாக பகிர்ந்து வந்திருப்பதை காண முடிந்தது. பழைய பதிவுகளில் விண்ணப்பிப்பதற்கான தேதி முடிந்தவிட்டதாக இருந்தது. சில பதிவுகளில் ஜூன் 8, ஜூன் 10 என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பதிவிட்டிருந்தனர். இப்படி ஒரு திட்டம் இருந்தால் ஊடகங்களில் செய்தி வந்திருக்கும். தேதி நீட்டிக்கப்பட்டிருந்தால் பிஐபி எனப்படும் அரசின் செய்தித் துறை தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த திட்டம் தொடர்பாக துண்டு செய்தியைக் கூட காண முடியவில்லை. இவை எல்லாம் இந்த பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.

சரி, இந்த பதிவில் என்ன உள்ளது என்று பார்ப்போம் என்று ஆய்வு செய்தோம். இந்தியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று அறிய அதை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனா (Pradhan Mantri Swanidhi Yojana Scheme 2024) என்று இருந்தது. இப்படி ஏதேனும் திட்டம் உள்ளதா என்று இதை கூகுளில் டைப் செய்த தேடிப் பார்த்தோம்.  Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) என்ற பெயரில் திட்டம் ஒன்று இருப்பது தெரிந்தது. சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவித் திட்டம் என்று தெரிந்தது. இந்த திட்டமானது சாலையோர வியாபாரிகளுக்கு ஒரு ஆண்டில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் திட்டம் என்று அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வறுமை ஒழிப்புத் திட்டம் என்று தவறாக பகிர்ந்திருப்பது தெளிவானது.

அடுத்ததாக அந்த இணையதள லிங்கை திறந்து பார்த்தோம். உள்ளே செல்லும் போது கம்ப்யூட்டர் ஆன்டி வைரஸ் அந்த இணையதளம் பாதுகாப்பற்றது என்று எச்சரித்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி உள்ளே சென்றோம். இணையதள முகவரியும் இந்திய அரசாங்க இணையதள முகவரி போல இல்லை. உள்ளே சென்றால் 2024ம் ஆண்டுக்குள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா என்று கேட்டு ஒரு இணையதள பக்கம் வந்தது. இதற்கும் மேல் சென்றால் நமக்கே ஆபத்தாகிவிடலாம் என்று வெளியே வந்துவிட்டோம். இதன் மூலம் இந்த தகவலும் தவறானது, லிங்க்-கும் தவறானது என்பது உறுதியானது.

முடிவு:

பிரதமர் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இணையத்தில் விண்ணப்பித்தால் 10 ஆயிரம் ரூபிள் கிடைக்கும்  என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply