FACT CHECK: குடிசைக் கொளுத்தி வெடியை தடை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள குடிசை கொளுத்தி வெடியைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குடிசை கொளுத்தி வெடி விவகாரம் – ராமதாஸ் கண்டனம். புதிதாக விற்பனைக்கு வந்துள்ள குடிசை கொழுத்தி வெடி தன் கட்சியை அவமான படுத்த வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ளது. அரசு உடனே இதைத் தடை செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ்” என்று இருந்தது.

இந்த பதிவை P V Sudhakar Sudha என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே இது போலியானது என்று தெரிகிறது. வழக்கமாக புதிய தலைமுறை பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இல்லை. பின்னணி வாட்டர் மார்க் லோகோ இல்லை. அனைத்துக்கும் மேலாக குடிசை கொளுத்தி என்பதை கொழுத்தி என்று தவறாக எழுத்துப் பிழையுடன் வெளியிட்டுள்ளனர். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன. 

ஆதாரப்பூர்வமாக இது போலியானது என்பதை உறுதி செய்ய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் தேதி அகற்றப்பட்டிருந்ததால் இது பற்றி புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

தொடர்ந்து குடிசை கொளுத்தி வெடி என்று ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் வெளியானதாக செய்தி இல்லை. பட்டாசு படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வன்னியர் சங்கத்தின் சின்னத்துடன் கூடிய பட்டாசு படத்தை 2020ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: sharechat.com I Archive

அதில், குடிசை கொளுத்தி வெடி என்று எல்லாம் எழுதப்படாமல் இருந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து விஷமத்தனமாக எடிட் செய்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள குடிசை கொளுத்தி என்ற பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குடிசைக் கொளுத்தி வெடியை தடை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False