FACT CHECK: நாம் தமிழர் கட்சியை கலைக்க சீமான் முடிவு என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

நாம் தமிழர் கட்சியைக் கலைக்க சீமான் முடிவு செய்துள்ளார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாம் தமிழர் கட்சி கலைப்பு? அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியை சந்திப்பதால் நாம் தமிழர் கட்சியை கலைக்க சீமான் முடிவு என தகவல்; திமுகவில் இணைய பரிசீலனை செய்வதாகவும் தகவல்” என்று இருந்தது.

இந்த பதிவை BJP Tamilnadu Official என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Bharath Kumar Salem என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 12ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க-வை தொடர்ந்து மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான். நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெற்றது. அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் மிக அதிக அளவில் இடங்களை வெல்ல முடியவில்லை. நாம் தமிழர் கட்சியாலும் சொல்லிக்கொள்ளும் வகையில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களை பிடிக்க முடியவில்லை. 

இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பியபோது, “நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடையவில்லை. பல இடங்களில் வென்றுள்ளோம். இப்போது இல்லை எனில் நாளை வெல்வோம்” என்று கூறியிருந்தார். இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, தி.மு.க-வில் இணைய சீமான் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.

சீமான் கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.க-வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. கூட்டணி சேர மறுத்து ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து நின்று போட்டியிட்டு வருகிறார். அப்படிப்பட்ட சீமான், கட்சியைக் கலைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் என்ற செய்தி நம்பும் வகையில் இல்லை. அப்படி ஒரு ஆலோசனையை சீமான் நடத்தியதாகத் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எந்த ஒரு பேச்சும் இல்லை.

முன்னணி ஊடகங்களில் பணியாற்றும் மூத்த நிருபர்களுடன் பேசியபோது அப்படி எந்த ஒரு பரிசீலனை நடந்ததாகச் செய்தி இல்லை என்று கூறினர்.

இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம். வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டுகளில் தேதி இருக்கும். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் தேதி அகற்றப்பட்டு இருந்தது. மேலும், இதில் உள்ள தமிழ் ஃபாண்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டுகளில் உள்ளது போல இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதைக் காட்டின. இதை உறுதி செய்ய நியூஸ் 7 தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு அக்டோபர் 12ம் தேதி வெளியாகி இருந்தது. எனவே, அதற்கு முன்பாக வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அப்போது, அக்டோபர் 11ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு வெளியாகி இருப்பது தெரிந்தது.

ஆனால், அதில், “கோயிலும் அங்கேதான் இருக்கும், சாமியும் அங்கேதான் இருப்பார்; கொரோனா குறைந்த பின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே, திடீரென கொரோனா பரவினால் அரசைக் குறை சொல்வதற்கா? – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்” என்று இருந்தது. 

அசல் பதிவைக் காண: Facebook 

வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தளங்கள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, சீமான் தன்னுடைய கருத்தைக் கூறியிருந்தார். அது பா.ஜ.க-வுக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசுக்கு அதாவது தி.மு.க-வுக்கு ஆதரவாகவும் இருந்தது. எனவே, சீமான் கட்சியைக் கலைக்கிறார் என்று பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பியிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த நியூஸ் கார்டு குறித்து நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது. நாங்கள் வெளியிட்டது இல்லை என்றார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியைக் கலைக்க சீமான் பரிசீலனை செய்து வருகிறார் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது போன்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாம் தமிழர் கட்சியை கலைக்க சீமான் ஆலோசனை நடத்தி வருவதாக நியூஸ் 7 வெளியிட்டது போன்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title: நாம் தமிழர் கட்சியை கலைக்க சீமான் முடிவு என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False