
சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், வில் ஸ்மித்துக்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று செந்தில்வேல் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டது போன்று ட்வீட் பகிரப்பட்டுள்ளது. அதில், “உழைக்கும் மக்களின் குரலாக #ஜெய்பீம் திரைப்படத்தில் ஒலித்த நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா ஆரத்தியில் பங்கேற்று முழு சங்கியாக மாறி விட்ட ஹாலிவுட் நடிகர் சனாதனவாதி வில் ஸ்மித்திற்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கின்றது..” என்று இருந்தது.
இந்த பதிவை Dev Amk Chennai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 29ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது அளிக்காமல், முழு சங்கியாக மாறிய வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது வேதனை அளிக்கிறது என்று செய்தியாளர் செந்தில் கூறியது போன்று ட்வீட் பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், அப்படி எந்த ஒரு ட்வீட்டும் நமக்கு கிடைக்கவில்லை. உண்மையில் அவர் அப்படிப் பதிவிட்டிருந்தால் இந்துத்துவா ஆதரவாளர்களால் மிகப் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டிருக்கும். எனவே, சந்தேகத்துடன் அந்த பதிவு பற்றி தேடினோம்.
உண்மையில் இது அவருடைய ட்விட்டர் பக்கம்தானா என்று பார்த்தோம். @Senthillvel79 என்று டைப் செய்து தேடிய போது நமக்கு அதன் முகப்பு பக்கம் கிடைத்தது. வெறும் 2196 பேர் தான் பின்பற்றுபவர்கள் என்று இருந்தது. எனவே, இது உண்மையான ஐடி-யாக இருக்காது என்று தோன்றியது. ட்விட்டரில் செந்தில்வேல் என்று டைப் செய்து தேடிய போது, வேறு ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் நமக்குக் கிடைத்தது. அதன் ஐடி: @Senthilvel79. இரண்டும் பார்க்க ஒரே மாதிரியாக இருந்தது. இந்த பக்கத்தை 1.71 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

@Senthilvel79 என்ற உண்மையான அக்கவுண்ட் போல கூடுதலாக மற்றொறு “L” சேர்த்து @Senthillvel79 எனப் போலியா ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கியிருப்பது தெரிந்தது. போலியான அக்கவுண்ட்டில் யாரோ விஷமி செந்தில்வேல் கூறியது போன்று ட்விட் வெளியிட, அதை ஸ்கிரீன்ஷாட் என்று பலரும் பகிர்ந்து வருவது தெரிந்தது. மேலும் செந்தில் வேல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் தான் வெளியிட்டது இல்லை என்றும் உறுதி செய்திருந்தார். இதன் மூலம் இந்த ட்வீட் பதிவை செந்தில்வேல் வெளியிடவில்லை என்பது உறுதியானது.
வில் ஸ்மித் சாமி கும்பிடுவது போன்ற படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது… அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற ஆரம்பித்ததாக அறிவித்தாரா என்று தேடின் பார்த்தோம். அப்போது 2019ம் ஆண்டு வில் ஸ்மித் ஹரித்வார் கங்கை வழிபாட்டில் பங்கேற்றதாகவும், அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டதாகவும் செய்தி கிடைத்தது. மதம் மாறிவிட்டார் என்று எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive 1 I christiantoday.com I Archive 2
அவர் பற்றிய சுய விவரக் குறிப்பில் பிறந்தது, ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர், கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்தவர் என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் எந்த ஒரு தேவாலயத்தையும் சேர்ந்தவர் இல்லை. திருமுழுக்கு பெற்று வளர்க்கப்பட்டேன், கத்தோலிக்க பள்ளிக்கு சென்றேன், அண்டை வீட்டில் வசித்த யூதர்களுடன் பழகினேன், இஸ்லாமிய பெண் மீது காதல் கொண்டேன்… எந்த ஒரு மதத்திலும் எல்லா பதிலும் கிடைத்துவிடுவது இல்லை. என்னை மீறிய உயர் சக்தியான கடவுளை நம்புகிறேன்” என்று வில் ஸ்மித் கூறியதாக செய்திகள் கிடைத்தன.
கிறிஸ்துமஸ் பண்டிகளை உற்சாகமாக குடும்பத்தினருடன் கொண்டாடும் வீடியோக்களும் கிடைத்தன. அவர் இந்துவாக மாறினார், சனாதனதர்மத்தைப் பின்பற்றுகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சூர்யாவுக்கு அளிக்காமல் வில் ஸ்மித்துக்கு வழங்கியிருப்பது வேதனை அளிக்கிறது என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு அதிருப்தி தெரிவித்தாரா செந்தில்வேல்?
Fact Check By: Chendur PandianResult: False
