
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் ஆசி வழங்க மறுத்துவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குப் புகைப்படம் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் சிருங்கேரி மடத்துக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட படம் அது. அந்த ஆங்கில பதிவில், “ராகுல் காந்திக்கு ஆசி வழங்க சிருங்கேரி சங்கராச்சாரியார் மறுத்துவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த பதிவை தமிழில் யாரும் பகிர்ந்துள்ளார்களா என்று ஃபேஸ்புக்பில் தேடினோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பதிவை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. அதில், “சிருங்கேரி சாரதா பீட ஜெகத்குரு சங்கராச்சாரியார் ராகுல் பப்புவிற்கு ஆசி வழங்க மறுத்து விட்டார்..! இப்படித்தான் நாம் நமது ஆன்மீக அமைப்புகள் அதன் பீடாதிபதிகள் தலைவர்கள் சகல ஆலய அர்ச்சகர்கள் ராகுல் பப்பு திராவிட நாத்திக அப்புகளை நிராகரித்து ஆசி வழங்க கூடாது.! இஃதை உடனடியாக முன் மாதிரியாக கொண்டு செயற்படுத்துங்கள்! ஓம் நமசிவாய…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Sivappugaz Adv என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2019 ஏப்ரல் 5ம் தேதி பதிவிட்டிருந்தார்.
2021ம் ஆண்டு இந்த பதிவை தமிழச்சி என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் பகிர்ந்திருந்தார். அவர் பதிவில் சங்கராச்சாரியார் ஆசி வழங்க மறுத்துவிட்ட நிலையில், ராகுல் காந்தியும் சித்தராமையாவும் மடத்தில் இருந்து வெளியேறினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி பலரும் இந்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் சூழலில் அவருக்கு சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆசி வழங்க மறுத்துவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நாம் ஃபேஸ்புக்கில் தேடிய போது, 2019ம் ஆண்டில் இந்த பதிவு வைரலாக பரவியிருப்பது தெரிந்தது. எனவே, ராகுல் காந்தி – சங்கராச்சாரியார் சந்திப்பு எப்போது நடந்தது என்று தேடிப் பார்த்தோம்.
நம்முடைய தேடுதலின் போது இந்த புகைப்படம், 2018ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி சிருங்கேரி சங்கராச்சாரியாரைச் சந்தித்தது தெரிந்தது. அப்போது வெளியான செய்தி எதிலும் சிருங்கேரி சங்கராச்சாரியார் ராகுல் காந்திக்கு ஆசி வழங்க மறுத்துவிட்டார் என்று குறிப்பிடப்படவில்லை. தீவிர வலதுசாரி ஊடகத்தில் கூட ராகுல் காந்தி சங்கராச்சாரியார் சந்திப்பு பற்றி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் கூட ராகுல் காந்திக்கு ஆசி வழங்க சங்கராச்சாரியார் மறுத்துவிட்டார் என்று குறிப்பிடப்படவில்லை.

உண்மைப் பதிவைக் காண: deccanherald.com I Archive I vijaykarnataka.com I Archive 2
2018ல் ராகுல் காந்தி – சங்கராச்சாரியார் சந்திப்பு தொடர்பாகத் தொடர்ந்து தேடினோம். ஆங்கிலம், கன்னடத்தில் வெளியான செய்திகள் பல கிடைத்தன. அவற்றில் சிருங்கேரி சங்கராச்சாரியாரின் ஆசியைப் பெற்றார் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், ராகுல் காந்திக்குப் பழங்கள் மற்றும் ராஜிவ் காந்தி முன்பு மடத்துக்கு வந்த படங்களை சங்கராச்சாரியார் பரிசாக அளித்தார் என்றும் செய்தி, படங்கள் வெளியாகி இருப்பது தெரிந்தது.
காங்கிரஸ் கட்சி கன்னடத்தில் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவை மொழி மாற்றம் செய்து பார்த்தோம். அதில் கூட ராகுல் காந்திக்கு சங்கராச்சாரியார் ஆசி வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ராகுல் காந்திக்கு ஆசி வழங்க மறுத்திருந்தால் அது அப்போதே செய்தியாக வந்திருக்கும். ஆனால், சந்திப்புக்குப் பிறகு பல மாதங்கள் கழித்து வதந்தி உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
ராகுல் காந்திக்கு ஆசி வழங்க சங்கராச்சாரியார் மறுத்துவிட்டார் என்று பரவும் தகவல் குறித்து சிருங்கேரி மடத்தின் நிர்வாகி வி.ஆர்.கெளரி சங்கரிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் அந்த தகவல் தவறு என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. மடாதிபதி மற்றும் கட்சித் தலைவருடனான சந்திப்பு மிகவும் அன்பு நிறைந்ததாக இருந்தது. மடத்தில் பக்தர்களுடன் என்றைக்கும் அரசியல் பேசப்பட்டது இல்லை. சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி பற்றி போலீசில் புகார் அளிக்கப்படும்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிருங்கேரி மடத்தைத் தொடர்புகொண்டு இது பற்றி அறிய முயற்சி செய்தோம். ஆனால், நமக்குப் பதில் கிடைக்கவில்லை. அவர்கள் பதில் அளித்தால் அதை வெளியிடத் தயாராக உள்ளோம்.
இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் அந்த வதந்தி இன்னும் அதிகமாக பரவி வருவது தெரிகிறது. சிருங்கேரி சங்கராச்சாரியாரிடமிருந்து ராகுல் காந்தி ஆசி பெற்றார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஆசி வழங்க சங்கராச்சாரியார் மறுத்துவிட்டார் என்று தீவிர வலதுசாரி ஊடகங்களில் கூட செய்தி வெளியாகவில்லை. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆசி வழங்க சிருங்கேரி சங்காரச்சாரியார் மறுத்துவிட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Title:சிருங்கேரி சங்கராச்சாரியார் ராகுல் காந்திக்கு ஆசி வழங்க மறுத்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
